இணையவழி தொழில்நுட்பத்தின் கீழ் கட்டிடங்கள் நிர்மாணம் : வடமாகாணத்தில் இருந்து ஆரம்பம்

உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு இணையவழி (Online) முறையின் மூலம் கட்டிடங்களை நிர்மாணிப்பதற்கான விண்ணப்பங்களை அங்கீகரிக்கும் முறை வடமாகாணத்தில் இருந்து ஆரம்பமாகிறது.

முதற்கட்டமாக வடமாகாணத்தில் உள்ள 34 உள்ளூராட்சி நிறுவனங்களில் இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டதுடன், விரைவில் நாடளாவிய ரீதியில் உள்ள ஏனைய உள்ளூராட்சி நிறுவனங்களுக்கும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

உலக நகர திட்டமிடல் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம், வடமாகாண சபை கேட்போர் கூடத்தில் நேற்று திங்கட்கிழமை (13) நடைபெற்ற வைபவத்தில் இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம். திருமதி சார்ள்ஸ் அவர்கள் Zoom தொழில்நுட்பத்தினூடாக இணைந்து கொண்டதுடன், வடமாகாண சபையின் பிரதம செயலாளர் சமன் பந்துலசேன, நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் பிரசாத் ரணவீர, வடமாகாண அலுவலக பணிப்பாளர் டி.பி.எஸ்.கே. திஸாநாயக்க, பிரதிப் பணிப்பாளர் கே. ஜீவகன் மற்றும் அரச அதிகாரிகள், பல்கலைக்கழக மாணவர்கள், பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் பணிப்புரைக்கு அமைவாக இது நடைமுறைப்படுத்தப்படுகிறது.

கட்டிட அபிவிருத்தி அனுமதிகளுக்கு தேவையான அனைத்து அனுமதிகளையும் விரைவாகப் பெறுவதற்கு இந்த அமைப்பு உதவுகிறது. உள்ளூராட்சி நிறுவனங்களின் அதிகாரிகளுக்கு இந்த (Online) தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதன் முதன்மை நோக்கம், கட்டிடங்களை நிர்மாணிப்பதற்கான விண்ணப்பங்களை அங்கீகரிக்க எடுக்கும் நேரத்தை குறைத்து, எளிமைப்படுத்துவதன் மூலம் அதிக சேவையை வழங்குவதாகும்.

9000 சதுர அடிக்கு மேல் கட்டிடங்கள் கட்டுவதற்கு நகர அபிவிருத்தி அதிகார சபையினால் அனுமதி வழங்கப்படுகிறது. 9000 சதுர அடிக்கு குறைவாக இருந்தால், சம்மந்தப்பட்ட உள்ளூராட்சி நிறுவனங்களினால் ஒப்புதல் அளிக்கப்படும்.

நகர அபிவிருத்தி அதிகாரசபை தற்போது இணையவழி (Online) முறை மூலம் கட்டிடங்களை நிர்மாணிப்பதற்கான விண்ணப்பங்களை அனுமதிக்கும் முறைக்கு  ஏற்கனவே ஒப்புதல் அளிக்க ஆரம்பித்துள்ளது. இது 2017 இல் தொடங்கப்பட்டது.

குறிப்பாக இணையவழி (Online) மூலம் கட்டிடங்களை நிர்மாணிப்பதற்கான விண்ணப்பங்களுக்கு  அனுமதி அளிப்பதன் மூலம், அதை கண்காணிக்க உயர் அதிகாரிகளுக்கு அனுமதி வழங்க முடியும். வெளிப்படைத்தன்மையை அதிகரிப்பதன் மூலம் மோசடி மற்றும் ஊழலை குறைக்க முடியும் என நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

உலக நகர திட்டமிடல் தினத்தை முன்னிட்டு நகர அபிவிருத்தி அதிகார சபையின் வடமாகாண அலுவலகத்தினால் புகைப்படப்போட்டியும் துவிச்சக்கரவண்டி சவாரியும் நடாத்தப்பட்டதுடன் வெற்றி பெற்றவர்களுக்கும் பங்குபற்றிய பாடசாலை மாணவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.