ஈஸ்டர் தாக்குதல் முழுமையான நிதி வைப்பிலிடப்பட்டதும் நீதிமன்ற கண்காணிப்புடன் பாதிக்கப்பட்டோருக்கு நட்டஈடு! நீதியமைச்சர் விஜயதாஸ கூறுகிறார்

உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைய மைத்திரிபால சிறிசேன, பூஜித் ஜயசுந்தர, நிலந்த ஜயவர்தன, ஹேமசிறி பெர்னாண்டோ,சிசிர மென்டிஸ் ஆகியோர் இழப்பீட்டுக்கான  அலுவலகத்தின் வைப்பு கணக்கில் 3 கோடியே 68 லட்சத்து 25 ஆயிரம் ரூபா வைப்பிட்டுள்ளனர்.

முழுமையான நிதி வைப்பிலிடப்பட்டதும் நீதிமன்றத்தின் கண்காணிப்புடன் பாதிக்கப்பட்டோருக்கு நட்டஈடு வழங்கப்படும் என நீதி,சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற அமர்வில் வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையின் போது ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் காவிந்த ஜயவர்தன உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியவை வருமாறு –

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்  சம்பவம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான தீர்ப்பு 2023.01.12 ஆம் திகதி வழங்கப்பட்டது.முன்னாள்  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர ,அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பிரதானி நிலந்த ஜயவர்தன, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் சிசிர மென்டிஸ் ஆகியோர்  இந்தத் தீர்ப்பின் குற்றவாளிகளாக  அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர்.

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்தால் பாதிக்கப்பட்டோருக்கு அப்போதைய அரசாங்கத்தால் கொள்கை அடிப்படையில் நட்டஈடு வழங்கப்பட்டது. உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பில் ஒரு தரப்பினர் உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் வழக்கு தாக்கல் செய்தார்கள். இந்த அடிப்படை உரிமை மீறல் மனுக்களுக்கு அமைய உயர்நீதிமன்றம் கடந்த ஜனவரி மாதம் 12 ஆம் திகதி தீர்ப்பளித்தது.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 10 கோடி ரூபா, முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர 7.5 கோடி ரூபா, அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பிரதானி நிலந்த ஜயவர்தன 7.5 கோடி ரூபா, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் 5 கோடி ரூபா, தேசிய புலனாய்வு பிரிவின் முன்னாள் பிரதானி சிசிர மென்டிஸ் ஒரு கோடி ரூபா மற்றும் அரசாங்கம் ஒரு கோடி ரூபா செலுத்த வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தவிட்டது. இந்த நிதியை நீதியமைச்சின் விடயதானத்தின் கீழ் உள்ள இழப்பீட்டுக்கான காரியாலயத்தில் வைப்பிடுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 15 மில்லியன் ரூபா, நிலந்த ஜயவர்தன 4.1 மில்லியன் ரூபா, பூஜித ஜயசுந்தர 1.7 மில்லியன் ரூபா,ஹேமசிறி பெர்னாண்டோ  5 மில்லியன் ரூபா,சிசிர மென்டிஸ் 10 மில்லியன் ரூபா, அரசாங்கம் ஒரு மில்லியன் ரூபா என்ற அடிப்படையில் இழப்பீட்டு அலுவலகத்துக்கு  3 கோடியே 68 லட்சத்து 25 ஆயிரம்  ரூபா வைப்பிலிடப்பட்டுள்ளது.

இந்த நிதி தொடர்பான விவரம் நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. முழுமையாக நிதி தொகை வைப்பிலிடப்பட்டதும் நீதிமன்றத்தின் கண்காணிப்புடன் பாதிக்கப்பட்டோருக்கு  நட்டஈடு வழங்கப்படும்.

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு  சமர்ப்பித்த அறிக்கை,பொலிஸார் சமர்ப்பித்த அறிக்கை என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு சட்டமா அதிபர் திணைக்களம் 42 குற்றப்பத்திரம் தாக்கல் செய்துள்ளது. 79 பேருக்கு எதிராக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றன. குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகள் நிறைவடையவில்லை. – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.