மன்னாரை குறிவைக்கும் ஆஸ்திரேலிய நிறுவனம்! சாள்ஸ் நிர்மலநாதன் காட்டம்
‘மன்னாரில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று மணல் அகழ்வில் ஈடுபடுவதற்கான முயற்சிகளை முன்னெடுத்து வருவதாக’ வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.
மன்னார் தமிழரசு கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் –
மன்னார் மாவட்டத்தில் குறிப்பாக மன்னார் தீவு பகுதிக்குள் கனிய மணல் அகழ்வு தொடர்பாக கடந்த இரண்டு மூன்று வருடங்களாக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று அகழ்வு பணியை மேற்கொள்வதற்கான முயற்சியை முன்னெடுத்து வருகின்றது.
இது தொடர்பாக நாங்கள் தொடர்ச்சியாக எங்களுடைய எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றோம். இந்த நிலையில் அண்மையில் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் அமைச்சின் அழைப்பின் பேரில் பல்துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் மன்னார் தீவு பகுதிக்குள் கள விஜயம் ஒன்றை மேற்கொண்டனர் என அறிந்தோம்.
அன்று நாடாளுமன்ற தினம் என்பதால் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று எங்களுடைய எதிர்ப்பைத் தெரிவிக்க முடியாத சூழ்நிலை இருந்தது. அதே நேரம் அன்றைய நாள் நான் பிரதேச செயலாளரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு மன்னார் தீவினுடைய நிலப்பரப்பும் மன்னார் கடல் நிலப்பரப்பின் அமைவும் சம அளவாக இருப்பதால் இங்கு அகழ்வுப்பணி மேற்கொண்டால் தீவு அழிந்து போகும். எனவே வந்திருக்கும் அதிகாரியிடம் இதைத் தெரிவிக்கும் படியும் இங்கே அகழ்வு பணியை மேற்கொள்ள மாவட்ட அபிவிருத்தி குழுவின் அனுமதி கிடைக்காது எனவும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எதிர்ப்பு இருப்பதால் இதை நடைமுறைப்படுத்த முடியாது என்ற தகவலை அதிகாரிகளிடம் தெரியப்படுத்துமாறு தெரிவித்திருந்தேன்.
இதற்கு அடுத்த நாள் நேரடியாக நான் கொழும்பில் வடமாகாண ஆளுநரை சந்தித்து இந்த மணல் அகழ்வு தொடர்பாகவும் மணல் அகழ்வுக்கான ஆய்வு தொடர்பாகவும் எனது 100 வீத எதிர்ப்பை தெரிவித்த போது ஆளுநர் அதற்கு இணங்கி இருந்தார்.
அத்துடன் இந்த முயற்சியை இந்த நிறுவனம் கைவிட வேண்டும் அரசாங்கத்துக்கும் தொடர்ச்சியாக நாங்கள் கூறி வருகிறோம். எங்களுடைய தீவு பகுதிக்குள் எந்த விதமான ஆராய்ச்சியோ அகழிப்பணியோ மேற்கொள்ள வேண்டாம் என்பதை மீண்டும் மீண்டும் அரசாங்கத்திற்கு கூறிக் கொள்ள விரும்புகிறேன். – இவ்வாறு சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்
கருத்துக்களேதுமில்லை