இலங்கை கிரிக்கெட் தடை செய்யப்பட்டமைக்கு ஜனாதிபதியும் அரசும் பொறுப்புக் கூறவேண்டும்! சாடுகிறார் சஜித் பிரேமதாஸ

இலங்கை கிரிக்கெட் சபையின் பிரதானிகள் சர்வதேச கிரிக்கெட் பேரவையிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கமையவே இலங்கை கிரிக்கெட் தடை செய்யப்பட்டது.

அதனால் இந்த பிரதானிகளை ஜனாதிபதியும் அரசாங்கமும் பாதுகாப்பதாக இருந்தால் கிரிக்கெட் தடைக்கு இவர்களும் பொறுப்புக்கூற வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில்  விசேட கூற்றொன்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில் –

எமது நாட்டுக்கு கிரிக்கெட் விளையாட்டு தடைசெய்யப்படப்போவதாக பலரும் தெரிவித்து வந்தனர்.  ஆனால் இலங்கை கிரிக்கெட்டை தடை செய்யுமாறு சர்வதேச கிரிக்கெட் பேரவையிடம் கோரிக்கை விடுத்தது யார் என்பதை ஜனாதிபதி மற்றும் நாட்டில் இருக்கும் விசாரணைகுழு தேடிப்பார்க்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். அவ்வாறு சர்வதேச கிரிக்கெட் பேரவையிடம் கோரிக்கை விடுத்தவரையே ஜனாதிபதி உட்பட இந்த அரசாங்கம் பாதுகாக்காத்து வருகிறது.

அதனால் எமது நாட்டின் கிரிக்கெட்டை தடை செய்யுமாறு கோரிக்கை விடுத்தவர்களை இந்த அரசாங்கம் பாதுகாப்பதாக இருந்தால், சர்வதேச கிரிக்கெட் பேரவை இலங்கை கிரிக்கெட்டை  தடை செய்தமைக்கு ஜனாதிபதியும் அரசாங்கமும் பொறுப்புக்கூற வேண்டும்.

சர்வதேச கிரிக்கெட் பேரவையிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கமையவே கிரிக்கெட் தடை செய்யப்பட்டது. இந்த கோரிக்கையை விடுத்தது, இலங்கை கிரிக்கெட் சபையின் பிரதானிகளாவர். அந்தக் கோரிக்கை  நிகழ்நிலையில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின்போதே விடுக்கப்பட்டிருக்கிறது.

அத்துடன் நாங்கள் தெரிவிப்பது பொய்யாக இருந்தால், இந்த நிகழ்நிலை கலந்துரையாடலில் பாகிஸ்தான் கிரிக்கெட் சபையை பிரதி நிதித்துவப்படுத்தி கலந்துகொண்ட அந்த பிரதிநிதியிடம் கேட்டுப்பார்க்கலாம்.

அதனால் இலங்கை கிரிக்கெட்டை தடை செய்யுமாறு சர்வதேச கிரிக்கெட் பேரவையிடம் கோரிக்கை விடுத்த இலங்கை கிரிக்கெட் சபையின் பிரதானிகளைப் பாதுகாக்கின்ற ஜனாதிபதியும் இந்த அரசாங்கமுமே இதற்குப் பொறுப்புக்கூற வேண்டும். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.