ரணில் புகழ் பாடும் அமைச்சர் டக்ளஸ்!

வளர்ச்சியடைந்த நாடுகள் மட்டுமன்றி வல்லரசு நாடுகளும் கூட பொருளாதார வீழ்ச்சி கண்ட வேளை வளர்ந்து வரும் நாடாகிய இலங்கைத் தீவை தன் ஆளுமையால் தற்காத்தவர் ஜனாதிபதிபதி ரணில் விக்ரமசிங்க என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு —

தென்னிலங்கை எமக்கு தீர்வு வழங்காதென்று சுயலாபக் கூச்சிலிடுவோர் இதே ஆளுமை மிக்க ரணில் விக்ரமசிங்க அவர்களுடன் நான்காண்டுகள் தேன் நிலவு கொண்டாடி மகிழ்ந்தனர். எதை அவர்கள் சாதித்தனர்? இதற்கு நீங்கள் ஆயிரம் வியாக்கியானங்கள் கொடுத்தாலும் போதிய அரசியல் பலத்தோடு இருந்தும் நீங்கள் மாபெரும் வரலாற்றுத் தவறு விட்டமையை அது பதிவு செய்துள்ளது.

2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்கு முன்னர் தமது உதடுகளுக்கு தாமே சீல் வைத்துக்கொண்டவர்கள் இவர்கள். இன்று அரசாங்கம் நல்லிணக்கத்திற்கு சீல் வைத்திருக்கிறது என்று சுதந்திரமாக பேசுகிறார்கள். நல்ல மாற்றம். வரவேற்கிறேன். சமாதானத்திற்கான கதவுகளை அரசாங்கம் இறுக மூடியிருப்பதாகச் சொல்கிறார்கள்.

பாவம் அவர்கள் கண்ணிருந்தும் குருடர்கள். செவியிருந்தும் செவிடர்கள். கண்ணிழந்த மனிதர் முன்னே ஓவியம் வைத்தார். செவியிழந்த மனிதர் முன்னே பாடலிசைத்தார். எத்தனை வாய்ப்புகள் கிடைத்தும் அத்தனையும் பன்றிக்கு முன்னால் வீசப்பட்ட முத்தாகப் போய் விட்டன.

இலங்கை – இந்திய ஒப்பந்தம். இதை ஏற்றுக்கொண்ட ஒரு கட்சியின் காலில் விழுந்து, இடுப்பைப் பிடித்து, மெல்ல எழுந்து, கழுத்தை நெரிக்கும் அந்த வாத்தியார் இலங்கை – இந்திய ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்ட ஒருவராகவே பார்க்கப்படுகிறார். தென்னிலங்கை இறுகப் பூட்டி வைத்திருக்காம். ஒப்புக்கொள்ளலாம். அது இலங்கை இந்திய ஒப்பந்தத்திற்கு முந்திய வரலாறு.

சந்திரிகா அம்மையார் இலங்கை – இந்திய ஒப்பந்தத்தை விட பல மடங்கு முன்னேற்றகரமான தீர்வை முன் வைத்த போது இந்த வாத்தியார் இன்று தொத்தி ஏறியிருக்கும் கட்சி அன்று அதை எதிர்த்து கொழும்பில் ஊர்வலம் போனது. எந்த அடிப்படையில் போனீர்கள்? அப்போது இந்த வாத்தியார் தன் கண்களுக்கும் காதுகளுக்கும் சீல் வைத்துக்கொண்டிருந்தாரா? அல்லது கட்டாயப் பயிற்சியில் விறகுக்கட்டை ஏந்திக்கொண்டிருந்தாரா?

ஜனாதிபதி அவர்கள் மக்களுடன் பேசி பிரச்சினைகளைத் தீர்க்கத் தயாராக இருக்கின்றார். ஆகையால் பிரச்சினைகளைத் தீர்க்க முன்வருமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

எனவே, இந்த நாட்டை மீளக் கட்டியெழுப்ப வேண்டிய வழிமுறைகளையும், எமது நாட்டு மக்களின் வாழ்க்கை நிலையையும் பேணிப் பாதுகாக்க வேண்டிய வழிமுறைகளையும் நன்கு அறிந்தவரும் அவரேயாவார்.

அந்த வகையில்தான் 2024 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தை அவர் முன்வைத்திருக்கின்றார் என்பதை நான் இங்கு கூறியே ஆக வேண்டும்.

எமது நாடு எத்தகைய பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீண்டு வருகின்றது என்பதை யாரும் மறந்துவிடவோ, மறுத்துவிடவோ முடியாது.

இந்த நாடு, சூழ்ச்சிகரமான இக்கட்டு நிலைக்குத் தள்ளப்பட்டிருந்த காலகட்டத்தில், இந்த நாட்டைப் பொறுப்பேற்க எவருமே முன்வராத நிலையில், தைரியமாக முன்வந்து இந்த நாட்டைப் பொறுப்பேற்ற ஒரேயொரு தலைவர் எமது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கதான். – என்றார்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.