இலங்கை கிரிக்கெட் நிறுவன பிரச்சினை தொடர்பில் அனைத்து தரப்புடனும் பேச்சு! அமைச்சர் டிரான் தகவல்

இலங்கை கிரிக்கெட் நிறுவனப் பிரச்சினை தொடர்பில் அதனுடன் தொடர்புபட்ட அனைத்து தரப்புடனும் அமைச்சரவை உபகுழு பேச்சுக்களை நடத்துமென்று அதன் உறுப்பினர்களில் ஒருவரான அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தலைமையிலான அமைச்சரவை உபகுழு நியமித்துள்ளார். அந்தக் குழுவில், அமைச்சர்களான டிரான் அலஸ், மனுஷ நாணயக்கார மற்றும் காஞ்சன விஜேசேகர ஆகியோரும் உறுப்பினர்களாக உள்ளனர்.

இந்நிலையில் குறித்த குழுவின் அடுத்தகட்டச் செயற்பாடுகள் தொடர்பில் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் –

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும். முறையானதொரு மாற்றம் ஏற்பட வேண்டும். அது சட்டத்துக்கு உட்பட்டதாக அமைய வேண்டும் என்று எதிர்பார்க்கின்றார்.

அந்த அடிப்படையில் தான் தற்போது அமைச்சரவையின் உபகுழு நியமிக்கப்பட்டுள்ளது. எனவே, அமைச்சரவை உபகுழு, விரைவில் கிரிக்கெட் நிறுவனத்துடன் தொடர்புடைய அனைத்து தரப்பினரையும் சந்தித்து உரையாடவுள்ளது. இந்தக் கலந்துரையாடல் அரசியல் பேதங்களுக்கு அப்பாற்பட்டதாக நிச்சயமாக காணப்படும்.

விசேடமாக, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தடை தொடர்பிலும், சர்வதேச கிரிக்கெட் சபையுடன் கலந்துரையாடவுள்ளது. இதற்கான செயற்பாட்டு நிகழ்ச்சி நிரல்கள் விரைவில் இறுதி செய்யப்படவுள்ளன. – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.