வரவு செலவுத் திட்டம் மூலம் முழுமையான பொருளாதார வளர்ச்சி : ஷெஹான் சேமசிங்க!

நாட்டில் மீண்டும் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்படாத வகையில் முறையான பொருளாதார முகாமைத்துவத்துடன் கூடிய வரவு செலவுத் திட்டம் இம்முறை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.

2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தொடர்பில் நிதியமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“பொருளாதார நெருக்கடியினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குவதுடன் சிறிய மற்றும் நடுத்தர வர்த்தக முயற்சிகளை கட்டியெழுப்புவதற்கும் இவ்வருட வரவு செலவுத் திட்டத்தில் விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தின் மூலம் பொருளாதாரத்தின் பல்வேறு துறைகளில் வளர்ச்சியை எட்ட முடியும்.

பொருளாதாரத்தில் வளர்ச்சியை ஏற்படுத்த, நெருக்கடிக்கு முன்னிருந்த பொருளாதார நிலைக்கு நாட்டைக் கொண்டு வருவது அவசியம்.

நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மை இதுவரை எந்தளவுக்கு எட்டப்பட்டுள்ளது என்பதை மத்திய வங்கியின் தரவுகளை அவதானிப்பதன் மூலம் உறுதிப்படுத்த முடியும்.

இதுவரை எட்டப்பட்ட பொருளாதார ஸ்திரத்தன்மை 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட ஆவணத்தின் பிரதிபலன் என்று கூற வேண்டும்.

மேலும், அடுத்த ஆண்டு 1.8 வீத பொருளாதார வளர்ச்சியை அரசாங்கம் எதிர்பார்க்கிறது. ஆனால் அதை 2 வீதம் அல்லது அதற்கு மேல் அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளோம்.

குறிப்பாக, இந்த பொருளாதார நெருக்கடியின் போது கடுமையான அழுத்தத்திற்கு உள்ளான மக்கள் குழுக்களுக்கு நாங்கள் அதிக கவனம் செலுத்தியுள்ளோம்.

மேலும், பொருளாதார நெருக்கடியால், சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களின் மேம்பாட்டுக்காக இவ்வருட வரவு செலவுத் திட்டத்தில் 30 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.