வரவு – செலவுத் திட்டத்தை பெரமுன ஆதரிக்கக்கூடாது! ஜி.எல். பீரிஸ் வற்புறுத்து

நாட்டில் அடுத்த வருடம்  புதிய வரிக் கொள்கைகள் அமுல்படுத்தப்படவுள்ளன. இதன் காரணமாக அத்தியாவசிய பொருள்களின் விலைகள் அதிகரித்து மக்களின் வாழ்க்கை செலவு அதிகரிக்கும்.

பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில் வரவு – செலவுத் திட்டம் முன்வைக்கப்படவில்லை. எனவே பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்து உள்ள மக்களை மேலும் நெருக்கடிக்குள்ளாக்கும் இந்த வரவு – செலவுத் திட்டத்தை பொதுஜன பெரமுன ஆதரிக்கக் கூடாது என சுதந்திர மக்கள் சபையின் பிரதிநிதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர்  ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

கொழும்பில் அமைந்துள்ள கட்சியின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் –

ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்டுள்ள பட்ஜெட் நாட்டுக்கு பொருத்தமானதா? அல்லது தற்போது இருக்கும் நெருக்கடிகளை மேலும் உக்கிரமடைய செய்யும் ஒன்றா என்பதை அனைவரும் சிந்திக்க வேண்டும்.

அடுத்த வருடம் மேலும் புதிய வரிக் கொள்கைகள் அமுல்படுத்தப்படவுள்ளன. வற் வரி 60 வீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளது. இந்த வற் வரி நாட்டு மக்களிடமிருந்தே அறவிடப்பட இருக்கிறது.

இதன் காரணமாக அத்தியாவசிய பொருள்களின் விலைகள் அதிகரித்து, மக்களின் வாழ்க்கைச் செலவு அதிகரிக்கும். உழைக்கும் மக்கள் பாதிக்கப்படப் போகிறார்கள்.

இதேவேளை கடந்த 8 மாதங்களுக்குள் மின் கட்டணம் செலுத்தாத சுமார் 7 லட்சத்து 80 ஆயிரத்து 835 குடும்பங்களின் மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதுவே நாட்டின் தற்போதைய நிலைமை.

எனவே, நாட்டு மக்களின் வாழ்க்கைச் செலவு வானத்தைத் தொடும் அளவுக்கு உள்ள நிலையில் இந்த வரவு – செலவுத்திட்டம் மீண்டும் அவர்களை நெருக்கடிக்குள் தள்ளும் என்பதை உணர்ந்து நாடாளுமன்றத்தில் நாம் வரவு – செலவுத்திட்டதுக்கு ஆதரவளிக்க வேண்டுமா என்பதை யோசிக்க வேண்டும்.

பணமில்லை எனக் கூறி நாட்டின் வளங்களை விற்பனை செய்கிறார்கள். நாட்டின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகியுள்ளது. அதிக வரியை அறிவிடத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டுக் கடன்களைப் பெற்றுக்கொள்கிறார்கள். இருக்கும் கடனைச் செலுத்தாமல் மேலும் மேலும் கடன்களைப் பெற்றுக்கொள்கிறார்கள். இந்த வரவு – செலவுத்திட்ட முன்மொழிவுகள் வெறும் கற்பனை கனவுகள். நடைமுறைக்குப் பொருந்தா.

நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை பொதுஜன பெரமுனவிடமே  இருக்கிறது. வரவு – செலவுத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதா அல்லது தோற்கடிக்கச் செய்வதா என்பது அவர்களின் கைகளிலேயே உள்ளது.நாட்டின் பொருளாதாரம், நாட்டு மக்களின் எதிர்காலம் பெரமுன எடுக்கப் போகும் தீர்மானத்திலேயே தங்கியுள்ளது. – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.