மலையக அரசியல்வாதிகள் விமர்சனங்களை விடுத்து மலையகத்தை அபிவிருத்தி செய்ய முன்வரவேண்டும்! இராமேஷ்வரன் அழைப்பு

மலையக அரசியல் கட்சிகளைக்  குறை கூறுவதையும் விமர்சிப்பதையும் விட்டு, ஜனாதிபதியுடன் இணைந்து மலையக பிரதேசங்களை அபிவிருத்திசெய்ய முன்வர வேண்டும்.

அததுடன் மலையக மக்களுக்கு 10 பேர்ச் காணி வழங்குவதற்காக 400 கோடி ரூபா ஒதுக்கியமைக்கு நன்றி தெரிவிக்கிறோம் என எம். ராமேஷ்வரன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான ஆறாவது நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில் –

மலையக மக்கள் இந்தியாவில் இருந்து வந்து 200 வருடங்கள் ஆகியும் அவர்களுக்குக் காணி, வீட்டு உரிமை இல்லை. என்றாலும் மலையகத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளை அவ்வப்போது ஆட்சிக்கு வரும் அரசாங்கத்துடன் இணைந்து எமது கட்சித் தலைவர்கள் மேற்கொண்டு வந்துள்ளனர்.

தற்போது ஜனாதிபதி மலையக மக்களுக்கு 10 பேர்ச் காணி வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்திருக்கிறார். அதற்காக 400 கோடி ரூபா ஒதுக்கி இருக்கிறார். இதற்காக எமது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

அத்துடன் நாம் மலையகம் என நிகழ்வை கொழும்பில் நடத்தினோம். அதில்  கலந்துகொண்ட வெளிநாட்டு அமைச்சர்கள் மற்றும் தலைவர்கள் மலையக மக்களுக்குப் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியிருந்தனர்.

ஆனால் இந்த நிகழ்வையும் சிலர் விமர்சித்து வருகின்றனர். ஆனால் அமைச்சர் ஜீவன் தொண்டமான் அந்த நிகழ்வுக்கு ஜனாதிபதியை அழைத்து, மலையக மக்களுக்கு 10 பேர்ச் காணி உறுதிமொழியை வழங்கவேண்டு எனக் கேட்டுக்கொண்டிருந்தார். அவ்வாறே ஜனாதிபதியும் அந்த உறுதியை அந்த நிகழ்வில் வழங்கினார். தற்போது அதற்காக நிதியும் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

அதேபோன்று இம்முறை வரவு – செலவுத் திட்டத்தில் மலையக அபிவிருத்திக்காக கடந்த முறைகளைவிட அதிக நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது.

ஆனால் இதனையும் சிலர் விமர்சனம் செய்கின்றனர். இவ்வாறு விமர்சனம் செய்தே மலையக மக்களின் எதிர்காலத்தை இல்லாமலாக்க சிலர் முனைகின்றனர். எம்மைப் பொறுத்தவரை ஆட்சியில் இருக்கும் அரசாங்கத்துடன் கலந்துரையாடி மலையக மக்களுக்கு என்ன தேவையோ அதனையே நாங்கள செய்து வந்திருக்கிறோம்.

ஆனால் தொண்டமான்கள் பல வருடங்கள் மலையகத்தை ஆடசி செய்துள்ள போதும் மலையக மக்களுக்கு எந்தவித காணி உரிமையையும் பெற்றுக்கொடுக்கவில்லை. நானே மலையக மக்களுக்கு 10 பேர்ச் காணி உரிமையை பெற்றுக்கொடுத்தாக ஒருவர் அண்மையில் தெரிவித்திருந்தார்.

உண்மையில் அரச காணியை வாங்கித் தனியாருக்குக் கொடுத்து, தனியார் நிறுவனம்  மலையக மக்களை அங்கே நுழையவிடாததால்,  குறித்த தனியார் நிறுவனத்துடன் கலந்துரையாடியே 8 பேர்ச் காணி பெற்றுக்கொடுக்கப்பட்டது, மாறாக, மலையகத்தில் எங்கேயும் 10 பேர்ச் காணி கொடுக்கப்படவில்லை.  ஆனால் இப்போதுதான் மலையத்தில் அமைச்சர் ஜீவன் தொண்டமானின் கோரிக்கையை ஏற்று ஜனாதிபதி 10 பேச் காணி வழங்குவதாக உறுதி வழங்கி இருக்கிறார்.

அத்துடன் மலையக மக்களுக்கு ஒரு லட்சத்து 70 ஆயிரத்துக்கும் அதிக வீடுகள் தேவையாக இருக்கிறன்றன. அரசாங்கம் ஒவ்வொரு வருடமும் 1000 வீடுகளையே நிர்மாணிக்கின்றது.

அதன் பிரகாரம்  மலையகத்துக்குத் தேவையான வீடுகளை பெற்றுக்கொள்ள பல வருட காலம் செல்லும். அதனால் 10 பேச் காணி உரிமையை பெற்றுக்கொள்வதன் மூலம் அந்த மக்களுக்கு அவர்களுக்கே வீடுகளை கட்டிக்கொள்ள முடியுமாகிறது. அதேபோன்று கல்வி அபிருத்திக்குத் தேவையான நிதியையும் ஜனாதிபதி ஒதுக்கி இருக்கிறார்.

அதனால் மலையக அரசியல் கட்சிகள் தொடர்ந்தும் குறை கூறுவதையும் விமர்சிப்பதையும் விட்டு, ஜனாதிபதியுடன் இணைந்து மலையக பிரதேசங்களை அபிவிருத்திசெய்ய முன்வர வேண்டும் என அழைப்பு விடுக்கிறோம்.

அதனால்தான் நாங்கள் ஜனாதிபதிக்கு எமது ஒத்துழைப்பை வழங்கி வருகிறோம். எதிர்காலத்திலும் ஜனாதிபதிக்கு எமது முழுமையான ஒதுழைப்பை வழங்கி மலையக மக்களுக்குத் தேவையான அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுப்போம். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்