உலகளாவியக் குழப்பங்களுக்கு மத்தியிலும் இலங்கையின் பாதுகாப்பு உறுதிசெய்யப்படும்! ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்து

இந்து சமுத்திரம் எந்தவொரு உலக பலவான்களின் தனிப்பட்ட ஆதிக்கத்துக்கு உள்ளாகாமல் இருப்பதை உறுதிப்படுத்துவதற்கான பொருளாதார, அரசியல் மற்றும் வெளிநாட்டு தொடர்புகள் உள்ளிட்ட சாத்தியமான கொள்கை அடிப்படையில் விரிவான மூலோபாயத் திட்டமொன்று அவசியனெ ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.

அதனால், உலகளாவிய குழப்பங்களுக்கு மத்தியிலும் இலங்கையின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

இரத்மலான ஈகல் லேக் சைட் வளாகத்தில் நடைபெற்ற இலங்கை தேசிய பாதுகாப்பு கற்கைகள் நிறுவனத்தின் இரண்டாவது பாடநெறிக்கான பட்டமளிப்பு நிகழ்விலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு, தேசிய பாதுகாப்பு கற்கைகள் நிறுவனத்தின் இரண்டாம் பாடநெறியை வெற்றிகரமாக நிறைவு செய்த முப்படையினர் மற்றும் இலங்கை பொலிஸின் 36 சிரேஷ்ட அதிகாரிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பட்டம் வழங்கினார்.

அதனையடுத்து தேசிய பாதுகாப்பு கற்கைகள் நிறுவனத்தால் வருடாந்தம் வெளியிடப்படும் நூலின் முதற் பிரதி ஜனாதிபதிக்கு வழங்கி வைக்கப்பட்டதோடு, தேசிய பாதுகாப்பு கற்கைகள் நிறுவனத்தின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் டீ.ஜீ.எஸ்.செனரத் யாபாவால் ஜனாதிபதிக்கு நினைவு பரிசும் வழங்கப்பட்டது.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க –

பாதுகாப்பு துறைக்குள் பரந்து காணப்படும் விடயப்பரப்புக்களை அறிந்துகொண்டு பொது மக்களுக்கும் அரச அதிகாரிகளுக்கும் அவசியமான குறுகிய கால பாடநெறிகளை பெற்றுக்கொடுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியதோடு, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சுடன் இணைந்து தேசிய பாதுகாப்புக்கான மூலோபாய திட்டமிடல் ஒன்றை தயாரிக்க வேணடுமெனவும் வலியுறுத்தினார்.

இரண்டாம் உலக யுத்த காலத்தில் அட்மிரல் எட்வின் தோமஸ் லயிடனின் இல்லமாக காணப்பட்ட தற்போதைய தேசிய பாதுகாப்பு கற்கைகள் நிறுவன கட்டடம் 1942 இரண்டாம் உலக யுத்தம் ஆரம்பமான காலத்தில் இந்து சமுத்திரம் தொடர்பிலான மூலோபாய தீர்மானங்களை மேற்கொள்வதற்கான மையமாக விளங்கிமையையும் ஜனாதிபதி நினைவுகூர்ந்தார்.  அவ்வாறு இங்கிருந்து மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் இந்து சமுத்திரத்தில் பிரித்தானியர் ஆட்சியை நடத்திச் செல்வதற்கான பிரதான காரணியாக விளங்கியதாகவும் தெரிவித்தார்.

இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர், மறைந்த தலைவர்களான டீ.எஸ்.சேனநாயக்க, ஜோன் கொத்தலாவல, சிறிமாவோ பண்டாரநாயக்க போன்றவர்கள் இந்து சமுத்திர வலயத்தை செல்வந்த நாடுகளின் மோதல்களிலிருந்து பாதுகாப்பதை உறுதிப்படுத்த முன்வந்தனர் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

அந்த தெரிவுகளை பிற்காலத்தில் பெண்டூன்க் மாநாட்டிலும் ஜகார்த்தா பிரகடனத்திலும் ஏற்றுகொள்ளப்பட்டு சுயாதீன கொள்கையுடன் சர்வதேச தொடர்புகளை முன்னெடுத்துச் செல்வதற்கான அர்பணிப்பை வெளிப்படுத்தியிருந்ததாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

உலகளாவிய அரசியல் மாற்றங்களின் போது, ஒருதலைபட்சமான உலகம் மிகவும் சிக்கலானதும் ஒருங்கிணைந்ததுமாக மாறும் எனத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின்  ஆட்சியின் கீழ் ஐக்கிய அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கைகளும் அண்மைக்கால மாற்றங்களும் அந்த நிலைமையை மேலும் கடினமானதாக மாற்றியிருப்பதாகவும் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.