நாட்டு மக்கள் மீது தாக்குதல் நடத்த இராணுவத்துக்கு நிதி ஒதுக்கவில்லை அநுர குமார சாட்டை
நாரஹேன்பிட்டி தெரேஸா தேவஸ்தானம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டவர்கள் யார், போரட்டத்தில் சந்தேகத்துக்கிடமாக கலந்துகொண்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டவர்கள் யார் என்பதை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும். நாட்டு மக்கள் மீது தாக்குதலை மேற்கொள்ள இராணுவத்துக்கு நிதி ஒதுக்கவில்லை என்று மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அநுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற 2024 ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு ஆகியவற்றுக்கான செலவுத் தலைப்புக்கள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியவை வருமாறு –
இராணுவம் தொடர்பில் நாட்டு மக்கள் மத்தியில் நிலையான கௌரவம் உள்ளது. ஒரு தரப்பினரது அரசியல் நோக்கத்துக்காக ஒருசில இராணுவத்தினர் செயற்படுகிறார்கள். இதனால் ஒட்டுமொத்த இராணுவத்தின் மீதான மக்களின் மதிப்பு மலினப்படுத்தப்படுகிறது. லசந்த விக்கிரமதுங்க படுகொலை,போத்தல ஜயந்த தாக்குதல், கீத் நொயார் கடத்தல், ஊடகவியலாளர் நாமல் தாக்குதல், பிரகீத் எக்னெலிகொட கடத்தல் உள்ளிட்ட சம்பவங்களுக்கு பின்னணியில் யார் உள்ளார்கள்.இந்த சம்பவங்கள் தொடர்பில் எடுக்கப்பட்ட விசாரணைகள்,அந்த விசாரணைகள் இடை நிறுத்தப்பட்ட விதம் என்பனவற்றை நாங்கள் நன்கு அறிவோம்.
ஒட்டுமொத்த இராணுவத்தையும் மலினப்படுத்தும் வகையில் இராணுவத்தில் தெரிவு செய்யப்பட்ட ஒருசிலர் செயற்படுகிறார்கள்.கடந்த 12 ஆம் திகதி நாராஹேன்பிட்டி தெரேஸா தேவஸ்தானத்தின் முன்பாக போராட்டம் ஒன்று இடம்பெற்றது. இந்தப் போராட்டத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 19 ஆம் திகதி தெரேஸா தேவஸ்தானத்துக்கு முன்பாக போராட்டம் இடம்பெற்றது.
இந்த போராட்டத்தில் சந்தேகத்துக்கிடமாக கலந்துகொண்ட ஒருசிலரை நாரஹேன்பிட்டி பொலிஸார் கைது செய்தனர்.ஆகவே இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் யார்,அவர்களை உடனடியாக விடுதலை செய்யுமாறு நாரஹேன்பிட்டி பொலிஸ் நிலையத்துக்கு தொலைபேசி ஊடாக அழுத்தம் பிரயோகித்தது யார் என்பதை குறிப்பிடுங்கள்.நாட்டு மக்கள் மீது தாக்குதலை நடத்த இராணுவத்துக்கு நாடாளுமன்றத்தின் ஊடாக நிதி ஒதுக்கப்படுவதில்லை.
பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன 2019 ஆம் ஆண்டு ஹெலிய என்ற ஓர் அமைப்பை ஆரம்பித்து கோட்டாபய ராஜபக்ஷ உட்பட ராஜபக்ஷர்களுக்கு சார்பாக செயற்பட்டார் .அதற்கு பிரதிபலனாகவே முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவரை பாதுகாப்பு செயலாளராக நியமித்தார்.
ஆனால் தற்போது இவர் ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகளின் அரசியல் செயற்பாடுகள் தொடர்பில் ஆராய்கிறார்.ஆகவே பிறரின் அரசியல் செயற்பாடுகளை ஆராய்வதற்கு முன்னர் பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன அவரது கடந்த காலத்தை மீட்டுப்பார்க்க வேண்டும்.
மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் செயற்பாடுகளில் ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகள் ஈடுபடுவதால் அவர்கள் பல்வேறு வழிகளில் நெருக்கடிக்குள்ளாக்கப்பட்டுள்
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரத்ன குறுகிய அரசியல் நோக்கத்துக்காக அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். ஆட்சி அதிகாரம் நிலையற்றது என்பதை அவருக்கு காலம் உணர்த்தும். – என்றார்
கருத்துக்களேதுமில்லை