ஊழல் ஒழிப்பு தொடர்பாகப் பாடம் கற்பிக்கிறார் மிலிந்த மொறகொட! நீதியமைச்சர் விஜயதாஸ கடும் விசனம்

அரச நிதியை மோசடி செய்தவர் என்று நீதிமன்றத்தால்  அடையாளப்படுத்தப்பட்ட மிலிந்த மொரகொட, ஊழல் மோசடி தொடர்பில் தற்போது பாடம் கற்பிக்கிறார். இவ்வாறானவர்களின் கட்டுரைகளை வெளியிடும் ஊடகங்கள் கடந்த காலங்களை ஆராய்ந்து பார்க்க வேண்டும் என  நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற 2024 ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு ஆகியவற்றுக்கான செலவுத்தலைப்புக்கள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில்  மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியவை வருமாறு –

ஊழல் ஒழிப்பு தொடர்பில் மிலிந்த மொரகொட தேசிய பத்திரிகைக்கு கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். இவரும்,பி.பி ஜயசுந்தரவும் ஒன்றிணைந்து செய்த முறைகேடுகளை 2007 ஆம் ஆண்டு நான் கோப் குழு ஊடாக வெளிப்படுத்தியுள்ளேன்.

125 பில்லியன் ரூபா பெறுமதியான ஸ்ரீ லங்கா காப்புறுதி நிறுவனத்தை  6 பில்லியன் ரூபாவுக்கு  தனியார் மயப்படுத்தியதை கோப் குழுவின் ஊடாக வெளிப்படுத்தினேன்.இந்த முறைகேடு தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு அப்போதைய அரசாங்கத்திடம்  வலியுறுத்தினேன். ஆனால் எவ்வித  நடவடிக்கைகளும் எடுக்கவில்லை. ஆனால் உயர்நீதிமன்றம் இந்த முறைகேட்டை சுட்டிக்காட்டி 14 நாள்களுக்குள் காப்புறுதி நிறுவனத்தை மீண்டும் அரசுடைமையாக்குமாறு தீர்ப்பளித்தது.

அதனைத் தொடர்ந்து  கொழும்பு துறைமுகத்துக்கு சொந்தமான எட்டரை ஏக்கர் காணி  தனியாருக்கு விற்கப்பட்டது.இதனால் அரசுக்கு ஒரு சதம் கூடக் கிடைக்கவில்லை என்று கோப் குழுவில் ஊடாக வெளிப்படுத்தினேன்.இதனை உயர்நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு இந்த முறைகேடுக்கு எதிராகத் தீர்ப்பளித்தது.

மிலிந்த மொரகொட அமைச்சராக பதவி வகிக்கும் போது இவ்வாறான மோசடிகள் இடம்பெற்றன. அதற்கு அவரது அமைச்சின் செயலாளராக இருந்த பி.பி.ஜயசுந்தர ஒத்துழைப்பு வழங்கினார். இவர்களின் செயற்பாட்டை உயர்நீதிமன்றம் சுட்டிக்காட்டி நிராகரித்துள்ளது. இவ்வாறான பின்னணியில் தான் இவர் தற்போது ஊழல் ஒழிப்பு தொடர்பில் கட்டுரை எழுதுகிறார்.

பல மோசடிகளுக்குத் துணைபோன மிலிந்த மொரகொட உள்ளிட்டவர்கள் எழுதும் கட்டுரைகளை வெளியிட முன்னர் ஊடகங்கள் அவர்களின் பின்புலத்தை ஆராய வேண்டும்.அல்லது அந்த கட்டுரைகளின் முடிவில் அவர்களின் கடந்த காலத்தை சுட்டிக்காட்ட வேண்டும். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.