மறைத்து வைக்கப்பட்டுள்ள அரிசியை கையகப்படுத்த விரைவில் சட்டமூலம்

அரிசி ஆலை உரிமையாளர்கள் மறைத்து வைத்திருக்கும் சம்பா மற்றும் கீரி சம்பா அரிசிகளை கையகப்படுத்தி சந்தைக்கு வழங்குவதற்கான சட்டமூலம் விரைவில் தயாரிக்கப்படும் என வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது நிலவும் சம்பா மற்றும் கீரி சம்பா அரிசி தட்டுப்பாட்டுக்கு தீர்வாக இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நாட்டில் உள்ள சம்பா மற்றும் கீரி சம்பா கையிருப்புகளை பாரிய அரிசி ஆலை உரிமையாளர்கள் மறைத்து வைத்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார். இதன்காரணமாக இன்னும் இரண்டு மாதங்களுக்குள் இந்த சட்டமூலம் தயாரித்து முடிக்கப்பட்டு அதனடிப்படையில் அரிசி இருப்புக்கள் கையகப்படுத்தப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

இந்த சட்டமூலத்தை விரைவாக தயாரிப்பது தொடர்பில், கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற அமைச்சரவையில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

நாட்டில் தற்போது சம்பா மற்றும் கீரி சம்பா அரிசிக்கான தட்டுப்பாடு செயற்கையாக உருவாக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சு மற்றும் விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த பருவத்தில், எட்டு லட்சம் ஹெக்டேர் நெல் சாகுபடி செய்யப்பட்டு, 2.7 மில்லியன் மெட்ரிக் டன் நெல் அறுவடை செய்யப்பட்டது. இந்நாட்டின் வருடாந்த அரிசித் தேவை 2.4 மில்லியன் மெற்றிக் தொன்களாகும். இதன்படி, நாட்டில் சுமார் 03 இலட்சம் மெற்றிக் தொன் அரிசி உபரியாக இருப்பதாக விவசாய அமைச்சு வெளிப்படுத்தியுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.