தொழிலுக்காக இலங்கையர்களை இஸ்ரேலுக்கு அனுப்பி தேவையற்ற பிரச்சினைகளுக்கு வழிவகுக்க வேண்டாம்! ஹக்கீம் கோரிக்கை

இஸ்ரேலுக்கு தொழில் வாய்ப்புக்களுக்கு  இலங்கையர்களை அனுப்புவதன் மூலம்  அங்கு உயிரிழப்புகள் ஏற்பட்டால் அது எமது நாட்டில் தேவையற்ற பிரச்சினைகளைத் தூண்ட காரணமாக அமையலாம். அத்துடன்  இந்த விடயத்தில் அரசாங்கம் அரபு நாடுகளைக்  கண்டுகொள்ளாது சந்தர்ப்பவாதமாக செயற்படக்கூடாது. அதனால் இலங்கையர்களை தொழிலுக்கும் அனுப்பும் விடயத்தை மீள் பரிசீலனை செய்ய வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில்  விசேட கூற்றொன்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில் –

காஸாவில் பாரிய  மனித உரிமை மீறல் மற்றும் யுத்தக்குற்றங்கள் இடம்பெற்று வரும் நிலையில் அதேநேரம் லட்சக்கணக்கான இலங்கை தொழிலாளர்கள் அரபு நாடுகளில் தொழில் வாய்ப்புக்களில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் இலங்கையில் இருந்து இஸ்ரேலுக்கு தொழிலாளர்களை அனுப்ப நடவடிக்கை எடுத்திருப்பது கவலைக்குரிய விடயம். அதேநேரம் இவ்வாறு அனுப்பப்படும் இலங்கையர்களுக்கு அங்கு இராணுவ பயிற்சி வழங்குவதற்கான திட்டமும் இருக்கிறது.

அத்துடன் யுத்தம் காரணமாக காஸாவில் இருக்கும் தொழிலாளர்கள் அங்கிருந்து வெளியேறி வரும் நிலையில் அங்கு ஏற்பட்டு வரும் தொழில் வெற்றிடங்களை நிர்ப்ப நடவடிக்கை எடுக்க இருப்பதுடன் பலஸ்தீனர்களிடமிருந்து பலவந்தமாக பறித்துக்கொண்ட காணிகளில் தொழில் வாய்ப்புக்களை வழங்குவதற்கே இலங்கையர்களுக்கு இந்த தொழில் வாய்ப்பு வழங்கப்படுகிறது. இதுதான் உண்மை நிலை. அதனால் இதுதொடர்பாகக் கவனம் செலுத்த வேண்டும்.

அத்துடன் எமது அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை பிழையான நேரத்தில்  மேற்கொள்ளப்படும்  பிழையான தீர்மானம் என  அரபு நாடுகளின் பல தூதுவர்கள் என்னிடம் தெரிவித்திருந்தார்கள். தென்னாபிரிக்க ஜனாதிபதி, பிரேஸில் ஜனாதிபதி ஆகியோர் இஸ்ரேலுடன் இராஜதந்திர உறவுகளை துண்டித்துக்கொள்ள நடவடிக்கை எடுத்து வரும் இந்த நிலையில், நாங்கள்  உணர்வுபூர்வமான இந்த விடயம் தொடர்பாகக் கவலையுடன் பார்க்க வேண்டும்.

அரபு நாடுகள் இஸ்ரேல் தொடர்பாகக் கலந்துரையாடி வரும் நிலையில் நாங்கள் சந்தர்ப்பவாதிகளாகச் செயற்படக்கூடாது. ஜேர்மனில் ஹிட்லர், யூதர்களைக் கொலை செய்தபோது அங்கு இடம்பெற்ற வெற்றிடங்களுக்கு இலங்கையர்களை அனுப்பும் நடவடிக்கையாகவே இதனை நான் காண்கிறேன். அதனால் இலங்கையில் இருந்து இஸ்ரேலுக்கு தொழிலுக்கு அனுப்பும் விடயத்தை அரசாங்கம் மீள் பரிசீலனை செய்ய வேண்டும்.

அத்துடன் தொழிலுக்கு செல்பவர்களுக்கு அங்கு இராணுவ பயிற்சிகள் வழங்கப்படுவதன் மூலம் இந்த நாட்டில் வேறுவிடயங்களும் இடம்பெறக்கூடும். இஸ்ரேலில் பணி புரிந்துவந்த இலங்கையர்கள் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். இது தொடர்பில் எமது கவலையை தெரிவித்துக்கொள்கிறோம். எதிர்காலத்தில் இவ்வாறான விடயங்கள் ஏற்பட்டால், அது எமது நாட்டில் தேவையற்ற தூண்டல்கள் ஏற்படலாம். அதனால் அரபு நாடுகள் லட்சக்கணக்கானவர்களுக்கு தொழில் வாய்ப்புக்களை வழங்கிக்கொண்டிருப்பதைக் கண்டுகொள்ளாது இந்த சந்தர்ப்பத்தில் இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். – என்றார்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.