ரணில் சொல்வார் செய்ய மாட்டார்! மனோ சாட்டை

ஜனாதிபதி பெருந்தோட்ட அபிவிருத்திக்காக ஒதுக்கியுள்ள 4 பில்லியன் ரூபாவை பெற்றுக்கொள்ள அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஏனெனில் ரணில் விக்ரமசிங்க சொல்வார் செய்ய மாட்டார். அத்துடன் இலங்கையை ஆசியாவில் உயர்ந்த இடத்துக்கு கொண்டு சென்ற பெருந்தோட்ட மக்களுக்கு இலங்கை அரசாங்கம் ஒன்றுமே வழங்கியதில்லை என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற அடுத்த வருடத்துக்கான வரவு – செலவு திட்டத்தில் நீர்வழங்கல் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சுக்கான  ஒதுக்கீட்டு சட்டமூலம் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில் –

ஜனாதிபதி நாடாளுமன்றத்துக்கு அண்மையில் வந்து தெரிவிக்கும்போது 1948 இல் திறைசேரியில் வெளிநாட்டு நிதியம் அதிகமாக இருந்தது எனத் தெரிவித்திருந்தார்.

அது உண்மை. வெளிநாட்டு மூலதனத்தில் ஆசியாவில் ஜப்பானுக்கு அடுத்த இடத்தில் இலங்கையே இருந்தது. பிரித்தானியாவுக்கும் கடன் கொடுத்ததாக ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.

எனது நினைவின் பிரகாரம் ஜேர்மனிக்கே கடன் கொடுதோம் என நினைக்கிறேன். கடன் கொடுக்கும் அளவுக்கு வெளிநாட்டு நிதியம் எம்மிடம் இருந்தது என்றால் அது எமது உழைப்பாகும். இலங்கையில் ஏற்றுமதி என அப்போது தேயிலை, இறப்பர் மாத்திரமே இருந்தது.

அதனால் மலையகத் தோட்ட தொழிலாளர்களின் உழைப்பே நாட்டின் வெளிநாட்டு நிதியம் அதிகளவில் இருப்பதற்குக் காரணமாகும்.

இவ்வாறு பாரிய உழைப்பை நாட்டுக்காக செய்த இந்த மக்களுக்கு இலங்கை அரசு என்ன பரிசு வழங்கியது என்றால், ஒன்றும் இல்லை என்றே தெரிவிக்க வேண்டும்.

உலக வங்கி, மத்திய வங்கி, செஞ்சிலுவை சங்கம் மற்றும் இலங்கைக்கு வந்து சென்ற ஐக்கிய நாடுகளின் விசேட அறிக்கையாளர் போன்ற அனைவரும் இலங்கையில் மிகவும் பின்தங்கிய மக்களாக பெருந்தோட்ட மக்களை அடையாளம் காட்டிவிட்டுச் சென்றுள்ளனர்.

இலங்கையை ஆசியாவில் உயர்ந்த இடத்துக்குக் கொண்டு சென்ற மக்களுக்கு இலங்கை அரசு இந்த மக்களுக்கு வழங்கிய பரிசு இதுதான். அத்துடன் பெருந்தோட்ட மக்களின் தேவைப்பாடுகள் குறைபாடுகள் தொடர்பாக இந்த நாடாளுமன்றத்தில் முழுநாள் விவாதத்தை நடத்தி நாங்கள் எமது மக்களின் நிலைமையை உலக நாடுகளுக்குத் தெரியப்படுத்த நடவடிக்கை எடுத்திருந்தோம்.

அந்த விவாதத்துக்கு பின்னர் வெளிநாட்டு தூதுவர்கள் பலர் என்னை சந்தித்து, பெருந்தோட்ட மக்களின் தேவைப்பாடுகள் தொடர்பான மேலதிக விவரங்களைக் கேட்டறிந்துகொண்டார்கள்.

தமிழ் தேசிய முற்போக்கு முன்னணி 2015இல் நல்லாட்சி அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டிருந்தது. இந்திய அரசாங்கத்துக்கு கூட எமது மக்களின் நிலைமை தொடர்பாக சரியாக  தெளிவு இருக்கவில்லை.

நுவரெலியா மாவட்டத்தில் மாத்திரம்தான் எமது  மக்கள் வாழ்ந்து வருகிறார்கள் என்றே நினைத்துக்கொண்டிருந்தார்கள். ஆனால் நாட்டில் எங்கெல்லாம் எமது மக்கள் இருக்கிறார்கள் என்பதை நாங்கள் அவர்களுக்குத் தெரிவித்திருக்கிறோம்.

அத்துடன் வரவு செலவு திட்டத்தில் பெருந்தோட்ட அபிவிருத்திக்காக 4 பில்லியன் ரூபா நதி ஒதுக்கி இருப்பதாகவும் காணி உரிமை வழங்குவதாகவும் ஜனாதிபதி தெரிவித்திருப்பதை வரவேற்கிறோம்.

ஆனால் அதனை எப்படியாவது அவரிடமிருந்து பிடிங்கி எடுக்க அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏனெனில் ரணில் விக்ரமசிங்க தொடர்பில் எமக்க நன்கு தெரியும். சொல்லுவார் ஆனால் செய்யமாட்டார். வரும் என்பார் ஆனால் அது வராது.

நாங்கள் இங்கு குறை கூறினால் அது உங்களை அல்ல. ஜனாதிபதியைத்தான். நாங்கள் முரண்பட்டுக்கொள்ளத் தேவையில்லை. நாங்கள் வெளியில் இருந்து அழுத்தம் கொடுக்கிறோம். நீங்கள் உள்ளே இருந்து அழுத்தம் கொடுங்கள்.

அத்துடன் பெருந்தோட்ட மக்களுக்கு 10 பேர்ச் காணி வழங்குவதாக ஜனாதிபதி தெரிவித்திருக்கிறார். நாங்கள் 7 பேர்ச் காணி வழங்கினோம். நீங்கள் 3 பேர்ச் அதிகரித்து 10 பேர்ச் வழங்குவதாக தெரிவித்திருக்கிறீர்கள் அதனை நாங்கள் வரவேற்கிறோம்.

அதேபோன்று இந்திய நிதி அமைச்சர் 10 ஆயிரம் வீடுகளை வழங்குவதாகத் தெரிவித்திருந்தார். அந்த 10 ஆயிரம் என்பது 2002 இல் நாங்கள் இந்திய அரசாங்த்திடம் கேட்டுப்பெற்ற வீடுகளாகும் என்றே நினைக்கிறோம்.

அதேபோன்று தோட்டத் தொழிலாளர்களை நில உரிமையாளர்களாக்குவோம் என்ற வாக்குறுதியை சஜித் பிரேமதாஸவின் ஜனாதிபதி கொள்கை விஞஞாபனத்தில் வழங்கி இருக்கிறோம்.

அதேபோன்று நாடாளுமன்றத்தில் நாங்கள் கொண்டுவந்த ஒருநாள் விவாதத்தின் போதும்  இந்திய வம்சாவளி தோட்ட மக்களுக்கு காணி உரித்துரிமை வழங்க வேண்டும் என்ற கோஷத்தை ஆளும் எதிர்த்தரப்பு உறுப்பினர்கள் அனைவரும் தெரிவித்தார்கள்.

அது எமக்கு கிடைத்த வெற்றியாகும்.  எங்களுக்கு யாருடைய அனுதாபமும் தேவையில்லை, நீதியே தேவை என அன்று தெரிவித்தோம். அந்தக் கோரிக்கையை அமைச்சரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

அத்துடன் 2015 இல் நல்லாட்சி அரசாங்கத்துக்குள் இருந்து பல்வேறு வேலைத்திட்டங்களை மேற்கொண்டோம். அதில் குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தில் 6 பிரதேச சபைகளை உருவாக்க நடவடிக்கை எடுத்தோம். என்றாலும் எமது அரசாங்கம் தோல்வியுற்றதால் தற்போது அந்த நடவடிக்கை பூரணப்படுத்தப்படாமல் இருக்கிறது.

அதனை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். அதேபோன்று தோட்டத் தொழிலாளர்களுக்கு தனி வீடு கட்டவேண்டும் என்ற கோரிக்கையையும் நாங்கள் தான் ஆரம்பித்தோம்.

தமிழ் கிராமங்களை அங்கு உருவாக்கினோம். மலையக மக்களுக்கான அதிகாரசபையை ஏற்படுத்தினோம். ஆனால் அந்த அதிகாரசபைகள் எவையும் இல்லை. இவ்வாறு பல வேலைத்திட்டங்களை செய்தோம். அந்த வேலைத்திட்டங்கள் அனைத்தையும் சபையில் சமர்ப்பிக்கிறேன். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.