ஆட்சியிலிருந்த சகல அரசாங்கங்களும் போலியான வாக்குறுதிகளே வழங்கின! மலையக மக்கள் தொடர்பில் விஜித ஹேரத் கருத்து

ஆட்சியில் இருந்த சகல அரசாங்கங்களும்  பெருந்தோட்டத்துறை மக்களுக்கு பல வாக்குறுதிகளை வழங்கியுள்ளன. ஆனால் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் ஏதும் நிறைவேற்றப்படவில்லை.

நவீன காலத்திலும் அவர்கள் முகவரியற்றவர்களாக வாழ்கிறார்கள். இதனால் இவர்களின் உரிமை மறுக்கப்பட்டுள்ளது. இந்தியத் தமிழர்கள் என்ற அடிப்படையில் பார்க்காமல் இலங்கையர்கள் என்ற ரீதியில் உரிமைகள் அங்கீகரிக்கப்பட வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சுக்கான நிதி ஒழுக்கீடு குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியவை வருமாறு –

நாட்டுக்கு   அந்நிய செலாவணியை   ஈட்டித் தருவதற்கு பெருந்தோட்டத்துறை மக்கள் ஆரம்ப காலத்தில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுள்ளார்கள்.

ஆட்சியில் இருந்த சகல அரசாங்கங்களும் பல வாக்குறுதிகளை வழங்கியுள்ளன. ஆனால் எந்த வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படவில்லை.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் தற்போது புதிய வாக்குறுதிகளை வழங்கியுள்ளார்.இது புதிய வாக்குறுதியல்ல,2015 ஆம் ஆண்டு நல்லாட்சி காலப்பகுதியில் இந்த வாக்குறுதிகளை வழங்கினார்.

1.5 மில்லியனாக  மலையக மக்களுக்கு  உறுதியான முகவரி  இல்லை.அதற்கு உறுதியான காணி உரிமை இல்லை. உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.நாடு இல்லாதவர்களாகவே பெருந்தோட்ட மக்கள் இன்றும் வாழ்கிறார்கள். காணி உரிமை வழங்கப்படுவதாக காலம் காலமாக வாக்குறுதிகள் வழங்கப்படுகின்றன. ஆனால் அந்த வாக்குறுதிகள் ஏதும் நிறைவேற்றப்படவில்லை.

வாழும் இடத்தில் இருந்து எப்போது வெளியேற நேரிடும் என்ற அச்சத்தில் பெருந்தோட்ட மக்கள் வாழ்கிறார்கள். 1992 ஆம் ஆண்டு பெருந்தோட்டங்கள் கம்பனிகளுக்கு வழங்கப்பட்டன. ஆனால் தற்போது தோட்டங்கள் திட்டமிட்ட வகையில் காடாக்கப்படுகின்றன. தோட்ட கம்பனிகளின் ஊடாக வருமானம் கிடைக்கப்பெறுகிறதா என்பதை அரசாங்கம் கணக்காய்வு செய்ய வேண்டும்.

இந்தியத் திட்டத்தின் கீழ் வீடமைப்பு திட்டங்கள் முன்னெடுக்கப்படுகிறன்றன.நிர்மாணிப்புகள்  இன்றும் முழுமைபெறவில்லை.

60 சதவீதத்துக்கும் அதிகமானோர் இன்றும் லயன் அறைகளில் தான் வாழ்கிறார்கள்.தமது வசதிகளுக்கு அமைய  வீடுகளை அமைத்துக் கொள்ள முடியாத நிலை காணப்படுகிறது.

பெருந்தோட்டப் பகுதிகளில் கல்விக் கட்டமைப்பு பாதிக்கப்பட்டுள்ளது.  பெருந்தோட்ட பாடசாலைகளில் உயர்தரத்தில் கணிதம் மற்றும் விஞ்ஞானம்  ஆகிய பிரிவு கற்கை நெறிகளை ஆரம்பிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இந்நிலையில்  புதிய பல்கலைக்கழகங்களை ஆரம்பிப்பதாக ஜனாதிபதி குறிப்பிடுகிறார். 1000 ரூபா சம்பளம் கோரி இன்றும் பெருந்தோட்ட மக்கள் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள்.

பெருந்தோட்ட மக்களின் 1000 ரூபா சம்பள கோரிக்கை இன்று சாத்தியமற்றது.தற்போதைய வாழ்க்கை செலவுக்கும்,1000 ரூபா சம்பளத்துக்கும் இடையில் பாரிய வேறுபாடுகள் காணப்படுகின்றன.

பொருளாதாரப் பாதிப்பால் பெருந்தோட்டத்துறை ஏழ்மை சுட்டிக்குள் தள்ளப்பட்டுள்ளது. வீடு, சம்பளம் உள்ளிட்ட பிரச்சினைகளுடன் குடிநீர் பிரச்சினையையும் இவர்கள் எதிர்கொண்டுள்ளார்கள்.

பெருந்தோட்ட பகுதிகளில் உள்ள வைத்தியசாலைகளில்  பெரும்பாலானவை இன்று மூடப்பட்டுள்ளன.ஆனால் இந்த வைத்தியசாலைகளை அரச வைத்தியசாலைகளாக அடையாளப்படுத்துவதாக  கொள்கை ரீதியில் தீர்மானம் எடுக்கப்பட்டது.

தோட்ட பாடசாலைகள், தோட்ட வைத்தியசாலைகள் என்று தனித்து அடையாளப்படுத்துவது தவறு. இவர்களும் இலங்கையர்களே. ஆகவே பெருந்தோட்ட பகுதிகளில் உள்ள பாடசாலைகள் மற்றும் வைத்தியசாலைகள் தேசிய நீரோட்டத்தில் இணைக்கப்பட வேண்டும்.

பெருந்தோட்டத்தில் வாழும் மக்களை இந்தியத் தமிழர்கள் என்று வேறுபடுத்தாமல் அவர்களை இலங்கையர்கள் என்று அங்கீகரித்து அவர்களுக்கான  வசதிகளை வழங்க வேண்டும். – என்றார்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.