கிரிக்கெட் தொடர்பான அமைச்சரவை உபகுழு நியமனம் அமைச்சரின் அதிகாரத்தை இல்லாதொழிப்பதற்கானதல்ல சுசில் விளக்கம்

கிரிக்கெட் தொடர்பில் அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட உப குழு தற்போது கிரிக்கெட் தொடர்பில் நிலவும் நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதற்காகவேயன்றி விளையாட்டுத்துறை அமைச்சரின் அதிகாரங்களை இல்லாதொழிப்பதற்கல்ல என சபை முதல்வரும் அமைச்சருமான  சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானம் ஒன்று தொடர்பாக சபையில் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கும் போதே  இவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் –

கிரிக்கெட் தொடர்பில் எழுந்த நெருக்கடிகளை நிவர்த்தி செய்யும் வகையிலேயே அமைச்சரவை உப குழு அமைக்கப்பட்டது. குறிப்பாக கிரிக்கெட் போட்டிகளுக்கு சர்வதேச தடை ஏற்படுமானால் அதனை சரி செய்து கொள்வது எவ்வாறு என்பது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் அமைச்சரவைக்கு அமைச்சரவை உப குழு அமைக்க அதிகாரம் உண்டு.

உதாரணமாக கல்வித்துறை தொடர்பில் உப குழு அமைக்கப்பட்டு அதன் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ள செயற்பாடுகள் தொடர்பில் ஆலோசனை சபை கூட்டங்களில் முன்வைக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில் கிரிக்கெட் தொடர்பில் உபகுழு நியமிக்கப்பட்டது, அது தொடர்பான நெருக்கடிகளை ஆராய்ந்து போட்டிகளுக்கு தடை ஏற்படுமானால் அதனை நிவர்த்தி செய்து கொள்வது எவ்வாறு என்பதை பரிந்துரை செய்வதற்காகவாகும்.  அதன் மூலம் விளையாட்டுத்துறை அமைச்சரின் அதிகாரத்திற்கு எந்த தடைகளும் ஏற்படுத்தப்படவில்லை. அமைச்சரவையில் அது தொடர்பில் எந்தவித பேச்சுகளும் நடத்தப்படவில்லை. – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.