நாட்டுக்காகச் சிந்தித்து சரியான தீர்மானங்களை எடுக்க வேண்டும் பிரமித்த பண்டார தென்னக்கோன் அறிவுரை

கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருந்த இக்கட்டான சூழ்நிலையிலேயே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டைப் பொறுப்பேற்றார். வீழ்ந்துள்ள நாட்டைக் கட்டியெழுப்பக்கூடிய திறமை ஜனாதிபதிக்கு உள்ளது. அதன் காரணமாகவே நாம் ஆதரவு வழங்கினோம். அனைத்து சந்தர்ப்பங்களிலும் நாட்டுக்காக சிந்தித்து தீர்மானங்களை எடுக்க வேண்டும் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

மாத்தளை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே இராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிட்டவை வருமாறு –

நாடு சுதந்திரமடைந்து இதுவரையில் எந்தவொரு தலைவரும் சந்திக்காத பிரச்சினைகளுக்கு மத்தியில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டைப் பொறுப்பேற்றார். நெருக்கடிக்கு மத்தியில் மிகவும் இக்கட்டான நிலைமையிலேயே அவரை நாம் ஜனாதிபதி பதவியில் அமர்த்தினோம்.

அன்று ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை போராட்டகாரர்களால் ஆக்கிரமிக்கப்பட்டன. அலரி மாளிகையும் ஆக்கிரமிக்கப்பட்டது.  நாடாளுமன்றம் சுற்றிவளைக்கப்பட்டது. ஜனாதிபதியின் இல்லம் தீக்கிரையாக்கப்பட்டது. அந்த சந்தர்ப்பத்தில் அவருக்கு தங்குவதற்கு கூட இடமிருக்கவில்லை.

மேலும், டலஸ் அழகப்பெரும எமது நல்ல நண்பர். ஜனக்க பண்டார தென்னக்கோன் நாடாளுமன்றத்தில் இருக்கும் நெருங்கிய நண்பரும் கூட. நாம் நண்பர் அடிப்படையில் சிந்திக்கவில்லை. வீழ்ந்த நாட்டை எவ்வாறு மீண்டும் கட்டியெழுப்புவது, நெருக்கடிகளிலிருந்து எவ்வாறு மீள்வது என்பதையே நாம் சிந்தித்தோம். நாட்டைக் கட்டியெழுப்பக்கூடிய அடுத்த தலைவர் யார் என்பதையே சிந்தித்தோம்.

அதன் காரணமாகவே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கினோம். தலைவர் என்பவர் சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டும்.

வீதிப்போரட்டங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் மேற்கொள்வதன் மூலம் சில விடயங்களை செய்துவிட முடியாது. புதியதொரு நாட்டில் இருக்கிறோம்.

புதிய அரசியல் கலாசாரம் ஒன்றுக்குள் இருக்கிறோம் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். நாட்டின் நன்மை கருதி சரியான தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும். எமது மாற்றம் நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.

அவ்வாறு இல்லை என்றால் கடந்த வருடம் மே, ஜூலை மாதம் காணப்பட்ட மோசமான நிலைமை போன்று   நாடு மீண்டும் தள்ளப்படுவதைத் தடுக்க முடியாது. – என்றார்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.