வனவள திணைக்களத்தால் மக்களின் காணிகள் கையகப்படுத்தப்பட்டிருந்தால் விடுவிக்கப்படும் – பவித்ரா

மக்களின் காணிகள் வனவளத்துறை திணைக்களத்தின் கட்டமைப்புக்குள் உள்வாங்கப்பட்டிருந்தால் அந்த காணிகள் நிச்சயம் விடுவிக்கப்படும். 1985 ஆம் ஆண்டு காணி வரைப்படத்தை அடிப்படையாகக் கொண்டு முன்னெடுக்கப்பட்ட ஆய்வுகள் நிறைவுசெய்யப்பட்டுள்ளன.

மக்களின் காணிகள் உறுதிப்பத்திரத்துடன் கையளிக்கப்படும் என வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் பவித்ராதேவி வன்னியராட்சி தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (27) இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் சுற்றாடற்றுறை மற்றும் வனஜீவராசிகள், வனப்பாதுகாப்பு அமைச்சுக்கான செலவுத்தலைப்பு மீதான விவாதத்தில் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட 11 மாவட்டங்களில் 1985 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் காணி பராமரிப்பு செய்யப்பட்ட விதம் குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது,மக்களின் காணிகள் திணைக்களத்தின் கட்டமைப்புக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டால் அந்த காணிகள் விடுவிக்கப்படும்.

ஜனாதிபதியின் ஆலோசனைகளுக்கு அமைய அதற்காக இரண்டு அமைச்சரவை யோசனைகளை முன்வைக்க உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளேன்.

அமைச்சின் செயலாளர் மற்றும் பணிப்பாளர் ஆகியோர் மாவட்டங்களுக்கு நேரடியாக சென்று 1985 ஆம் ஆண்டுக்கு முன்னர் குடியிருந்த காணிகளை முழுமையாக அடையாளப்படுத்தியுள்ளனர்.

அதற்கான அறிக்கை தற்போது முழுமைப்படுத்தப்பட்டுள்ளது.மாவட்ட செயலாளருடன் தொடர்பு கொண்டு உங்களுக்கு (அங்கஜன் இராமநாதனை நோக்கி) அந்த அறிக்கையை பெற்றுக்கொள்ள முடியும்.

அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களை காட்டிலும் மேலதிகமாக யோசனைகள் ஏதும் காணப்பட்டால் அவற்றை முன்வையுங்கள்.மீள்பரிசீலனை செய்யலாம்.

ஜனாதிபதியின் செயலாளர் தலைமையிலான தேசிய குழுவில் சமர்ப்பித்து,காணிகள் ஆணையாளருக்கு அதிகாரங்களை பொறுப்பாக்கி,பிரதேச சபை ஊடாக உறுதிப்பத்திரத்துடன் காணிகள் கையளிக்கப்படும் என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.