தமிழர் பிரதேசத்தில் விளையாட்டில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியது உடற்கல்வி டிப்ளோமா கற்கைநெறி!
பழனித்துரை தர்மகுமாரன்,
தலைவர் – உடற்கல்வி டிப்ளோமா ஆசிரியர் சங்கம்.
தமிழர் பிரதேசத்தில் விளையாட்டுச் செயற்பாடும் அதன் திறன் சார்ந்த ஆற்றலும் பொலிவிழந்து கொண்டிருக்கையில் உதயமானதே உடற்கல்வி டிப்ளோமா கற்கைநெறி. இக் கற்கைநெறியானது ஆரம்பித்து 25 வருடங்களை பூர்த்தி செய்யும் நிலையில் நித்திலம் போற்ற நினைவுபடுத்தப் படுகின்றது.
1998 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 12 ஆம் திகதி இலங்கையிலே முதன் முதலாக யாழ். பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் வாழ் நாள் பேராசிரியர் பாலசுந்தரம்பிள்ளை அவர்களால் உடற்கல்வி டிப்ளோமாக் கற்கைநெறி ஆரம்பித்து வைக்கப்பட்டது. இரண்டு வருடங்களைக் கொண்ட உடற்கல்வி டிப்ளேமாக் கற்கைநெறியின் முதல் இணைப்பாளராக திருமதி தேவரஞ்சினி சுபாஸ்கரன் கடமைப் பொறுப்பை ஏற்று கற்கைநெறியின் வளர்ச்சியிலும் எழுச்சியிலும் முயற்சியுடன் தடம் பதிக்கச் செய்தார்.
உடற்கல்வி டிப்ளோமாக் கற்கைநெறி ஆரம்பிக்கப்பட்டபோது பல்வேறு விமர்சனங்கள் பல வழிகளிலும் முன்வைக்கப்பட்டு நசுக்குவதற்கும், சிதைப்பதற்கும் சிலர் முயன்றபோதும், பலரது விமர்சனங்களே இக் கற்கைநெறியை நிமிர்ந்து நிலையாக நிற்பதற்கு உதவியது. குந்தியின் வயிற்றில் பிறந்த கர்ணன் எவ்வாறு அரச குலத்தை இளந்தானோ அவ்வாறே யாழ்.பல்கலைக்கழகத்தில் உடற்கல்வி டிப்ளோமாக் கற்கைநெறிக்கு சென்ற மாணவர்கள் உள்ளேயும் வெளியேயும் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டனர்.
கர்ணணின் திறமை பிறப்பிலே ஒளிய வளர்ப்பில் அல்ல. என்பதை உணர்த்தியதுபோல உடற்கல்வி டிப்ளோமாக் கற்கைநெறி மாணவர்களின் திறன்களின் மூலம் கற்கைநெறி காலைக் கதிரவன் போல் சுடர்விட்டு பிரகாசிக்கத் தொடங்கியது. 2000 ஆம் ஆண்டு முதல் அணி மாணவர்களின் வெளியேற்றம் வேலைவாய்ப்பில் சதிராட்டம். தேவை இருந்தும் புறக்கணிப்பு, புரிதல் அற்ற செயற்பாடு வினைகள் வீரியமாக இருந்தால் விளை நிலத்தாள் முளைப்பதை தடுத்துவிட முடியாது. அதேபோல முதல் அணி மாணவர்களின் போராட்டம், நிறைந்த அர்பணிப்பும் பின்னர் தொடர்ச்சியாக இணைந்துகொண்ட டிப்ளேமா தாரிகளின் எண்ணிக்கையும் வேலை வாய்ப்பிற்கு அடித்தளம் இட்டது.
2005 ஆம் ஆண்டு முதன் முறையாக உடற் கல்வி ஆசிரிய நியமனம் உடற்கல்வி டிப்ளோமா தாரிகளுக்கு வடக்கு, கிழக்குத் தழுவி போட்டிப் பரீட்சையின் அடிப்படையில் 50 இற்கு குறையாத உடற்கல்வி ஆசிரியர்கள் பாடசாலைகளுக்கு நியமிக்கப்பட்டனர்.
இந்த நியமத்தின் மூலம் தமிழர் பிரதேசத்தில் விளையாட்டு மறுமலர்ச்சி அடைய வித்திடப்பட தொடர்ந்து சீரான இடைவெளியில் டிப்ளோமா ஆசிரிய நியமனம் வழங்கப்பட்டது. இதன் மூலம் பாடசாலை மாணவர்களின் விளையாட்டுத் திறன் வளர்ச்சி மேலோங்கத் தொடங்கியது. மழையைக் கண்ட புற்தரைகள் பச்சைப் பசேலாகக் காணப்படுவது போல உடற்கல்வி டிப்ளேமா ஆசிரிய நியமனத்தின் மூலம் கிராமப் புற பாடசாலைகளில் விளையாட்டு எழுச்சிகொள்ளத் தொடங்கியது.
தனியார் பாடசாலைகள், தேசிய பாடசாலைகள், 1 ஏபி பாடசாலைகளுக்கு நிகராகவும், சவால் விடும் வகையிலும் கிராமப்புறப் பாடசாலைகள் விளையாட்டில் சாதிக்கத் தொடங்கின. வில்வித்தை கற்று மாணசீகக் குருவான துரோணரால் புடம்போடப்பட்ட அர்ச்சுணன் சிறந்தவனாக பறைசாற்றப்பட்ட போதும் குலத்தின் பெயரால் திறமைகள் பொசிங்கிட உள்ளம் வெதும்ப பின்தள்ளப்பட்டவர்கள் கர்ணன், ஏகலைவன் போன்ற வில்லாளர்கள். அதேபோல உடற்கல்வி டிப்ளேமாக் கற்கைநெறி மாணவர்களும் பாடசாலையில் சாதித்து விளையாட்டுக்காகத் தம்மை அர்ப்பணித்து நிர்க்கதியில் விடப்பட்டவர்களுக்கு இக் கற்கைநெறி பெரும் வரப்பிரசாதமாக அமைந்தது. இல்லையேல் கர்ணன், ஏகலைவன் போல் விசுவாசம் இருந்தும் வீணாணவர்களாக ஒதுக்கப்பட்டிருப்பார்கள். இன்று விளையாட்டுத்துறையும் வளர்ந்திருக்க மாட்டாது.
உடற்கல்வி டிப்ளோமாக் கற்கைநெறியின் ஆரம்பம், அதனால் வெளியேற்றப்பட்ட டிப்ளோமா தாரிகளும் கிடைக்கப்பெற்ற உடற்கல்வி ஆசிரியர் நியமனமும் தமிழர் பிரதேசத்தில் விளையாட்டை வினைதிறனாக பரம்பல் அடையச் செய்தது. கிராமப்புறப் பாடசாலைகளுக்கு முதன்முறையாக வழங்கப்பட்ட உடற்கல்வி ஆசிரியர்கள் ஆச்சரியப்படும் வகையில் தேவை உணர்ந்து சேவை புரிந்தனர். மாணவர்கள் மத்தியில் விளையாட்டுத் திறன் அதிகரிக்கப்பட்டு தேசிய வெற்றிகளை குவிக்கத் தொடங்கினர். தேசிய அணிகளில் இடம்பிடிக்கத் தொடங்கினர். தமிழர்களின் அடையாத்தினையும் தூக்கி நிறுத்தினர். அதேபோல், சிறந்த போட்டி நடுவர்கள் தரமான பயிற்றுவிப்பாளர்கள், ஆரோக்கியமான சுற்றுப்போட்டிகள், ஒழுங்கமைப்பாளர்கள் உருவாக உடற்கல்வி டிப்ளோமாக் கற்கைநெறியே காரணம் எனக் கூறுவதில் மிகை ஏதும் இல்லை.
யாழ். பல்கலைக்கழகத்தில் முதன் முறையாக உடற்கல்வி டிப்ளோமாக் கற்கைநெறி ஆரம்பிக்கப்பட்ட பின்னரே இலங்கையில் விளையாட்டில் ஈடுபடும் மாணவர்களுக்கு பட்டப்படிப்புத் தேவை என்னும் உணர்வு அரசுக்கு ஏற்பட்டது. அதனால் சப்பிரகமுவ பல்கலைக்கழகத்தில் விளையாட்டு விஞ்ஞான பட்டப்படிப்பும், விளையாட்டு முகாமைத்துவ பட்டப்படிப்பும் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இருந்த போதும் யாழ். பல்கலைக்கழகத்தில் இக் கற்கைநெறி பட்டப்படிப்பாக மாறுவதற்கு சக்கர வியூகத்தில் சிக்கிய அபிமன்யு போல சாகவும் முடியாமல் வெளியில் வரமுடியாது வேதனைப் பட்டவனுக்கு கர்ணன் மோட்சம் கொடுத்தது போல் உடற்கல்வி டிப்ளோமாக் கற்கை நெறியின் இழுபறியில் பதவி வெறியர்களால் தட்டிக் கழிக்கப்பட்டு அந்தக் கற்கைநெறியை 2021 ஆம் ஆண்டு துணைவேந்தர் பேராசிரியர் சிவக்கொழுந்து சிறிசற்குராஜா தனது தற்துணிவாலும் மாணவர்களின் தேவை உணர்ந்தும் பட்டப்படிப்பாக ஆரம்பித்து வைத்தார்.
அதேபோல் இலங்கையில் சிறிஜெயவர்த்தனபுர, களனி பல்கலைக்கழகங்களில் விளையாட்டு விஞ்ஞானப் பட்டப்படிப்புக் காணப்படுகின்றது. இக்கற்கைநெறியின் ஆரம்பம் அமர்க்களம் என்பதால் விளையாட்டில் ஈடுபடும் மாணவர்கள் தமக்கு பட்டப்படிப்பை மேற்கொள்ள முடியும், தொழில் வாய்ப்பை பெறமுடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. இதனால் பாடசாலைகளில் பங்குபற்றும் போட்டியாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளதுடன், பெற்றோரும் அக்கறை காட்டத் தொடங்கினர்.
எனவே உடற்கல்வி டிப்ளோமாக் கற்கைநெறியின் 25 ஆவது ஆண்டை நினைவுபடுத்துவதுடன் கிராமப்புறப் பாசாலைகளின் விளையாட்டில் வினைதிறனான செற்பாட்டை முன்னெடுப்பதற்கு கிராம எழுச்சித்திட்ட விளையாட்டு அபிவிருத்தி என்னும் திட்டத்தை கிராமப் புறத்தை நோக்கி நகர்த்த வேண்டும். இதுவே இன்றைய தேவையாகும்.












கருத்துக்களேதுமில்லை