நாட்டின் மொத்த சனத்தொகைகளில் 3000 பேரில் ஒருவர் எய்ட்ஸால் பாதிப்பு சன்ன ஜயசுமன தகவல்

நாட்டில் 6000 பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த சனத்தொகையில் 3000 பேரில் ஒருவர் எய்ட்ஸ் நோயாளராக உள்ளனர். இதனை அலட்சியப்படுத்த முடியாது. பாலியல் நோய் தடுப்பு தொடர்பில் சுகாதார அமைச்சு விசேட கவனம் செலுத்த வேண்டும் என முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில்  சுகாதார அமைச்சுக்கான செலவீனத் தலைப்பு மீதான விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியவை வருமாறு –

சுகாதார அமைச்சராக பதவி வகித்ததால், தான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது உரையில் குறிப்பிட்டார். ஆகவே, அவரது வழியில் செல்ல சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரணவுக்கு கடவுள் துணை புரிய வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.

மருந்து ஒழுங்குபடுத்தல் சட்டம் தற்போதைய சூழ்நிலைக்கு பொருத்தமற்றதாக உள்ளது. ஆகவே தற்போதைய நிலைக்கு அமைய அந்த சட்டம் திருத்தம் செய்யப்பட வேண்டும். மக்கள் குறைந்த விலையில் மருந்துகளை பெற்றுக்கொள்வதற்கு நாடளாவிய ரீதியில் 50 அரச மருந்தகங்கள் (ஒசுசல) புதிதாக உருவாக்கப்பட வேண்டும்.50 ஒசுசலவிற்கான நடவடிக்கைகள் கடந்த அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டன.அவற்றை செயற்படுத்துமாறு அமைச்சரிடம் வலியுறுத்துகிறேன்.

மருந்துக் கொள்வனவு தரவு கட்டமைப்பு தொடர்பில் பாரிய பிரச்சினைகள் காணப்படுகின்றன.கடந்த அரசாங்கத்தில் தரவுகள் கசிவு பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.ஆகவே தரவு கட்டமைப்பு தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும்.

மருத்துவ துறை பாரிய நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள நிலையில் சமூகக் கட்டமைப்பில் பாலியல் ரீதியிலான நோய் தாக்கங்கள் தீவிரமடைந்துள்ளன.அண்மைய கணக்கெடுப்புக்கு அமைய நாட்டில் 6000 பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

மொத்த சனத்தொகையில் 3000 பேரில் ஒருவர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனை அலட்சியப்படுத்த முடியாது. பாலியல்  நோய் தொடர்பில் விழிப்புணர்வு நடவடிக்கைகளை விரிவுபடுத்த வேண்டும். அத்துடன் பாலியல் நோய் கட்டுப்பாடு குறித்து விசேட நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.