இலங்கை மாணவர்கள் 321 பேருக்கு அல்லாமா இக்பால் புலமைப் பரிசில்!
இவ்வாண்டு புலமைப்பரிசில் திட்டத்தின் மூலம் இலங்கை முழுவதும் தெரிவு செய்யப்பட்ட தகுதியான 321 மாணவர்களுக்கு பாகிஸ்தானின் உயர்கல்வியினை தொடர்வதற்கான புலமைப்பரிசில்கள் வழங்கிவைக்கப்பட்டன.
இலங்கையில் உள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம், பாகிஸ்தான் உயர் கல்வி ஆணைக்குழுவின் ஒத்துழைப்புடன் தகுதியான இலங்கை மாணவர்களுக்கான ‘அல்லாமா இக்பால் புலமைப்பரிசில் விருது வழங்கல் 2023′ நிகழ்வை அண்மையில் ஏற்பாடு செய்திருந்தது.
இப்புலமைப்பரிசில் பாகிஸ்தானின் தலைசிறந்த கவிஞரும் தத்துவஞானியுமாக திகழ்ந்த அல்லாமா முஹம்மது இக்பாலின் பெயரில் ஒவ்வோர் ஆண்டும் வழங்கப்படுகிறது.
இப்புலமைப்பரிசில் திட்டமானது 2019இல் ஆரம்பிக்கப்பட்டது.
இந்நிலையில், இவ்வாண்டு புலமைப்பரிசில் திட்டத்தின் மூலம் இலங்கை முழுவதும் தெரிவு செய்யப்பட்ட தகுதியான 321 மாணவர்களுக்கு பாகிஸ்தானின் உயர்கல்வியைத் தொடர்வதற்கான புலமைப்பரிசில்கள் வழங்கிவைக்கப்பட்டன.
அத்துடன், இலங்கையின் திறமையான 357 மாணவர்கள் ஏற்கனவே இப்புலமைப்பரிசிலின் ஊடாக இளமாணி, முதுமாணி மற்றும் கலாநிதி மட்டத்தில் தமது உயர் கல்வியைப் பாகிஸ்தானில் பயின்று வருகின்றனர்.
மேலும், அடுத்த ஆண்டுக்குரிய புலமைப்பரிசிலுக்கான விண்ணப்பம் 2024 பெப்ரவரியில் கோரப்படும்.
இந்நிகழ்வில் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு நிலை) உமர் ஃபாரூக் பர்கி உரையாற்றும்போது –
பாகிஸ்தான்,-இலங்கை ஆகிய இரு நாடுகளுக்கு இடையே நீண்டகால உறவு காணப்படுவதாகவும், பாகிஸ்தானில் கல்வி கற்கும் இலங்கை மாணவர்கள் பாகிஸ்தானியர்களின் விசேட விருந்தினர்கள் என்றும், இம்மாணவர்கள் சிறப்பான முறையில் கண்காணிக்கப்படுவார்கள் என்றும் குறிப்பிட்டார்.
இலங்கை முழுவதிலும் உள்ள அனைத்து இனத்தவர்களும் பாலினம் மற்றும் சமய வேறுபாடின்றி நியாயமான முறையில் இப்புலமைப்பரிசிலுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர் என்றும் தெரிவு செய்யப்பட்ட ஒவ்வொரு மாணவர்களும் பாகிஸ்தானில் தங்கள் உயர்கல்வியினை வெற்றிகரமாக முடித்து, இலங்கைக்கு திரும்பியதும், அவர்கள் ஒவ்வொருவரையும் பாகிஸ்தானின் தூதுவர்களாக பாகிஸ்தான் கருதுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், அல்லாமா இக்பால் புலமைப்பரிசில் விருது வழங்கும் நிகழ்வின்போது பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த உரையாற்றுகையில், பல்வேறு துறைகளில் அல்லாமா இக்பால் புலமைப்பரிசைப் பெறும் அனைத்து மாணவர்களுக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வதாகவும், இதுபோன்ற பாகிஸ்தான் அரசின் முயற்சிகளுக்கு நன்றி தெரிவிப்பதாகவும், இரு நாட்டு மக்களிடையே நல்லுறவை வளர்க்க எடுக்கப்படும் இவ்வாறான நடவடிக்கைகளை தான் வரவேற்பதாகவும் குறிப்பிட்டார்.
அத்தோடு, பாகிஸ்தான் உயர்கல்வி ஆணைக்குழுவின் தலைமைப் பணிப்பாளர் ஆயிஷா இக்ராம் தனது உரையில், இப்புலமைப்பரிசிலின் குறிக்கோளானது எவ்வாறு மாணவர்கள் தெரிவு செய்யப்படுகிறார்கள் என்பது குறித்தும் பாகிஸ்தானில் உள்ள முன்னணி பல்கலைக்கழகங்களின் உதவியுடன் இலங்கையில் நடைபெறவிருக்கும் கல்விக் கண்காட்சி நிகழ்ச்சி தொடர்பாகவும் விளக்கமளித்தார்.
அதனைத் தொடர்ந்து, பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் கூறுகையில், பாகிஸ்தானானது எப்போதும் இலங்கைக்கு தொடர்ந்து உதவும், இரு நட்பு நாடுகளுக்கிடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கு நிபந்தனையற்ற ஆதரவைத் தொடர்ந்து வழங்கும் என்று தெரிவித்தார்.
இந்நிகழ்வில் புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க, அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, இலங்கை பாகிஸ்தான் நாடாளுமன்ற சங்கத்தின் தலைவர், இலங்கை பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா, பௌத்த பிக்குகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து சிறப்பித்தனர்’













கருத்துக்களேதுமில்லை