இணக்கப்பாட்டின் அடிப்படையில் புதிய தலைமையைத் தெரிவோம்! தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை கூறுகிறார்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைமையை இணக்கப்பாட்டின் அடிப்படையில் தெரிவு செய்வதற்கு முயற்சிகளை எடுத்துவருவதாக அக்கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச்சபைக் கூட்டம் எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள நிலையில், அக்கட்சியின் தலைமைத்துவப் பதவிக்கு யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் சிவஞானம் சிறீதரன் ஆகியோர் விண்ணப்பங்களைச் செய்துள்ளனர்.

ஆரம்பத்திலிருந்தே புதிய தலைமைக்கான தெரிவானது வாக்கெடுப்பின்றி நடைபெறவேண்டும். அதுவே கடந்த காலங்களில் சம்பிரதாயமாக இருந்து வருகின்றது என்ற நிலைப்பாட்டில் இருக்கும் மாவை சோ.சேனாதிராஜா தற்போது தலைமைக்கான விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

இலங்கைத் தமிழரசுக்கட்சிக்கான புதிய தலைமை, எதிர்வரும் மாதம் நடைபெறுவதற்கு திட்டமிட்டுள்ள பொதுச்சபையின் மூலம் தெரிவு செய்யப்படவுள்ளது. இதற்காக எமது கட்சியின் இரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் விண்ணப்பங்களை செயலாளரிடத்தில் அனுப்பி வைத்துள்ளனர்.

என்னைப்பொறுத்தவரையில், எனது அரசியல் வாழ்க்கையில் தமிழரசுக்கட்சியின் தலைமைப்பதவிக்கான போட்டிகள் காணப்பட்டாலும் எப்போதும் வாக்கெடுப்பு வரையில் சென்றதில்லை. அவ்விதமான நிலைமைகள் சில வேளைகளில் கட்சியை கூறுபோடுவதற்கு வழிவகுக்கும் நிலைமைகள் ஏற்படும் ஆபத்துக்கள் உள்ளன.

ஆகவே, தலைமைப்பதவிக்கான தெரிவின்போது, வாக்கெடுப்பின்றி சுமுகமான அடிப்படையில் தெரிவை நிறைவு செய்வதை நோக்காகக் கொண்டு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளேன்.

விசேடமாக, தலைமைப்பதவிக்கு போட்டியிடுகின்ற வேட்பாளர்களிடையே இணக்கப்பாடுகளை ஏற்படுத்துவதன் ஊடாக புதிய தலைமையைத் தெரிவு செய்யும் அதேநேரம் அந்த தலைமையின் கீழ் கட்சி மேலும் வலுவாக தமிழ் மக்களின் இனவிடுதலைப் போராட்டத்தில் காத்திரமான பணிகளை எதிர்காலத்தில் முன்னெடுக்கும் என்பதே நோக்கமாக உள்ளது. – என்றார்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.