ஆதிவாசி சமூகத்தையும் நுண்கடன் ஆக்கிரமிப்பு! நீதியமைச்சர் விஜயதாஸ தெரிவிப்பு
நுண்கடன் திட்டத்தின் கொடுமைகளுக்கு ஆதிவாசி சமூகத்தினரும் தற்போது அகப்பட்டுள்ளார்கள். மத்திய வங்கியால் மாத்திரமே இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும்.
நுண்கடன் திட்டங்களைக் கண்காணிக்கும் வகையில் அதிகார சபையை ஸ்தாபிக்கும் சட்டமூலத்தை இன்னும் ஓரிரு மாதங்களில் சமர்ப்பிப்பேன் என நீதி,சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசமைப்பு மறுசீரமைப்பு அமைச்சுகளுக்கான செலவீனத் தலைப்பு மீதான விவாதத்தில் உரையாற்றிய எதிரணியின் சுயாதீன உறுப்பினர் டிலான் பெரேரா நுண்கடன் திட்டம் தொடர்பில் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டவை வருமாறு –
நுண்கடன் திட்டங்களால் நூற்றுக்கணக்கில் அல்ல தற்போது மில்லியன் கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
இது பாரதூரமான பிரச்சினையாகக் காணப்படுகிறது. மத்திய வங்கியால் மாத்திரம் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும். தலையிட முடியும். ஆனால் சட்ட சிக்கல்களால் பல பிரச்சினைகள் தோற்றம் பெற்றுள்ளன.
ஆதிவாசி சமூகத்தினரும் தற்போது நுண்கடன் திட்டத்தின் கொடுமைகளுக்கு அகப்பட்டுள்ளார்கள்.ஆகவே உடனடியாக ஒரு தீர்வு காண வேண்டும். ஆகவே நுண்கடன் நிதி நிறுவனங்களைக் கண்காணிக்கும் வகையில் அதிகார சபை ஒன்றை ஸ்தாபிப்பதற்கான சட்டமூலத்தை எதிர்வரும் ஓரிரு மாதங்களில் சபைக்கு சமர்ப்பிப்பேன். அதற்கு எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். – என்றார்.
கருத்துக்களேதுமில்லை