இஸ்ரேல் யுத்தத்தை நிறுத்த உலக நாடுகள் முன்வருக! ரவூப் ஹக்கீம் சபையில் வலியுறுத்தல்
உலகில் எந்த நாட்டிலும் இடம்பெறாத அளவுக்கு இஸ்ரேல் யுத்தக் குற்றத்தை மேற்கொண்டு வருகிறது. ஆனால் அதனை தடுத்து நிறுத்துவதற்கு சர்வதேச நாடுகளுக்கு முடியாமல் போயிருக்கிறது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற அடுத்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தில் நீதி அமைச்சுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலம் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில் –
பலஸ்தீன் காஸா மீது இஸ்ரேல் யுத்த நிறுத்தத்துக்கு பின்னர் மீண்டும் தாக்குதலை ஆரம்பித்திருக்கிறது. யுத்த நிறுத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையில் 171 நாடுகள் பிரகடனம் நிறைவேற்றிய போதும் இஸ்ரேல் எதனையும் கண்டுகொள்ளாது செயற்பட்டு வருகிறது. அங்கு சிறுவர்கள், பெண்கள், ஊடகவியலாளர்கள் என ஆயிரக்கணக்கானவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், இஸ்ரேலின் தாக்குதலில் இதுவரை 150 ஐக்கிய நாடுகளின் பணியாளர்கள் கொலை செய்யப்பட்டிருக்கின்றனர். யுத்தம் ஒன்றில் இவ்வாறு ஐக்கிய நாடுகளின் ஊழியர்கள் கொலை செய்யப்பட்டிருக்கின்றமை வரலாற்றில் இதுவே முதல் தடவையாகும். ஆனால், ஐக்கிய நாடுகள் சபையோ மேற்கத்திய நாடுகளோ இது தொடர்பாக மௌனம் காத்துவருவதையே காணமுடிகிறது.
மேலும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் மெழுகுவர்த்தியை கையில் ஏந்திய வண்ணம், பயங்கரவாதத் தடைச்சட்டத்தைப் பயன்படுத்திக்கொண்டு அரசாங்கம் எவ்வாறு வடக்கில் நடவடிக்கை எடுக்கப்போகிறது எனத் தெரிவித்திருந்தார். ஆனால் இதனையும் விட மோசமான சம்பவம் இஸ்ரேல் அரசாஙகம் பலஸ்தீனில் மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பில் அவர் என்ன சொல்லப்போகிறார் எனக் கேட்கிறோம்.
எனவே, இஸ்ரேல் மிகவும் மோசமான யுத்தக்குற்றங்களை மேற்கொண்டு வருகிறது. இஸ்ரேலில் இடம்பெறுவது யுத்தக்குற்றம் இல்லை என்றால் உலகில் எந்த நாட்டிலும் யுத்தக்குற்றம் இடம்பெறுவதில்லை. அதனால் இஸ்ரேல் யுத்தத்தை நிறுத்த உலக நாடுகள் முன்வர வேண்டும். அதற்காக நாங்களும் தொடர்ந்து அழுத்தம் கொடுக்க வேண்டும். அந்த வகையிலேயே ஒற்றுமையை வலியுறுத்தி பலஸ்தீனுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் யுத்த நிறுத்தம் இடம்பெறும் வரை பலஸ்தீன் ஆதரவு சால்வையை தொடர்ந்து அணிந்திருப்போம். – என்றார்.












கருத்துக்களேதுமில்லை