போதைப்பொருள் பாவனைக்கு எதிராக விசேட தேவையுடையோர் வீதி ஊர்வலம்

சர்வதேச  விசேட தேவையுடையோர் தினம் டிசெம்பர் மூன்றாகும். இதனை முன்னிட்டு மருதமுனை ஹியூமன் லின்க் விசேட தேவையுடையோர் வளப்படுத்தல் மத்திய நிலையம் ஏற்பாடு செய்த போதைப்பொருள் பாவனைக்கு எதிரான விழிப்புணர்வு வீதி ஊர்வலம்  மருதமுனையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மருதமுனை பிரதான வீதியின் பெரியநீலாவணை சந்தியில் ஆரம்பித்த இந்த விழிப்புணர்வு வீதி ஊர்வலம் பிரதான வீதி வழியாக வந்து மருதமுனை வைத்தியசாலை, ஷம்ஸ் மத்திய கல்லூரி பாடசாலை அமைந்திருக்கும் பிரதான வீதி வழியாக மீண்டும் வளப்படுத்தல் மத்திய நிலையத்தை வந்தடைந்தது.

‘போதை ஆயுளை அழிக்கும்’, ‘ஒன்றிணைவோம் போதையை ஒழிக்க’, ‘எங்களை ஒதுக்காதீர்கள்’, போன்ற சுலோகங்கள் மற்றும் சித்திரங்களை தாங்கியவாறு மாணவர்கள் ஊர்வலமாகச் சென்றனர். வீதி வழியாக சென்ற விசேட தேவையுடையோர்  மாணவர்களுக்கு தனவந்தர்கள் தமது அன்பளிப்புக்களையும் வழங்கினார்கள்.

இதில் வளப்படுத்தல் மத்திய நிலையத்தின் பணிப்பாளர் ஏ.கமறுத்தின், பணிப்பாளர் சபை உறுப்பினர் எஸ்.எல்.அஜமல்கான் உட்பட வளப்படுத்தல் மத்திய நிலையத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர்கள், ஆசிரியர்கள், நிர்வாக உத்தியோகத்தர்கள், சமூக மட்டத்திலான ஆதரவாளர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.