மீன்பிடித்துறையில் கௌரவமான தொழிலை ஊக்குவிப்பதற்கான வரைவு விதிமுறைகள்!

நாட்டின் மீன்பிடித்துறையில் கௌரவமான தொழிலை ஊக்குவிப்பதற்கான இலங்கையின் அர்ப்பணிப்பை மேலும் மேம்படுத்தும் வகையில் சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்தின் மீன்பிடித்துறையில் பணியாற்றுதல் தொடர்பான சமவாயம் 2007 தொடர்பான வரைவு விதிமுறைகள், தொழில் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்ககார, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த டி சில்வா, ஆஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் போல் ஸ்டீபன்ஸ், இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்தின் பணிப்பாளர் திருமதி சிம்ரின் சிங் ஆகியோருக்கு கையளிக்கப்பட்டது.

ஒத்துழைப்பு மற்றும் உரையாடல்களை வளர்ப்பதில் குறிப்பிடத்தக்க மைல் கல்லாக சி188 நுண்ணறிவு மன்றமும் இடம்பெற்றது.

உலகளாவிய ரீதியில், கடற்றொழில் சவால்மிக்கதொன்றாகும். சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்தால் உருவாக்கப்பட்ட சி188 சர்வதேச தொழில் நியமம் உலகளாவிய ரீதியில் கடற்றொழில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு, கௌரவமான பணிச் சூழ்நிலைகளை உறுதி செய்யும் அதே வேளை தரநிலைகள் மற்றும் ஒழுங்குமுறைகளையும் ஏற்படுத்துகின்றது.

இது கடற்றொழில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு சவால்கள் குறித்து தரநிலைகள் – வேலை நேரங்கள், தொழில் பாதுகாப்பு மற்றும் பணியாளர்களின் சுகாதாரம், பணி நிமித்தம் படகுகள், கப்பல்களில் வாழ்தல் போன்ற பல அம்சங்களை உள்ளடக்கும்.

இலங்கையைப் பொறுத்தவரை கடற்றொழில் துறை, உணவு பாதுகாப்பு, போஷாக்கு, வணிகம், வேலைவாய்ப்பு மற்றும் ஏற்றுமதி வருமானம் ஆகியவற்றில் முக்கிய பங்களிப்பை செலுத்துகின்றது. இத்துறை பொருளாதார நெருக்கடிகளால் அதிகம் பாதிக்கப்பட்ட துறைகளில் ஒன்றாகவும் விளங்குகின்றது.

நாட்டின் கடற்றொழில் துறையை வலுப்படுத்துவதற்கும், கண்ணியமான வேலை சூழ்நிலைகளை மேம்படுத்துவதற்கும் அரசாங்கத்தின் அர்ப்பணிப்பைக் குறிக்கும் இந்த வரைவு விதிமுறைகள, இலங்கை சி188 சமவாயத்தை அங்கீகரிப்பதற்கான பயணத்தில், தொழில் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சும் கடற்றொழில் அமைச்சும் ஒன்றிணைந்து கூட்டு அமைச்சரவை பத்திரமொன்றைச் சமர்ப்பிபதற்கான முக்கிய ஆவணமாக செயற்படும்.

நிகழ்வில் உரையாற்றிய, தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார, இலங்கை சி188 சமவாயத்தை உறுதிசெய்வது குறித்து வலுவான ஆதரவை தெரிவித்ததோடு, ‘மீனவர்களுக்கு கண்ணியமான வேலையை வழங்குவது என்பது சட்ட கடமை மட்டுமல்ல, ஒரு தார்மீக கடமையும் கூட. இது மீனவர்கள் உட்பட இலங்கையின் தனியார் துறை ஊழியர்களுக்கு ஒரு வலுவான சமூக பாதுகாப்பு அமைப்பை உருவாக்குவதற்கான அமைச்சின் பெரிய முயற்சிகளின் ஒரு பகுதியாகும். – என்று தெரிவித்தார்.

அனைத்து பங்குதாரர்களின் ஆதரவுடனும் இலங்கை சி188  சமவாயத்தை இறுதிசெய்து உறுதிப்படுத்துவதில் தாம் நம்பிக்கை கொள்வதாக கௌரவ கடற்றொழில்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

‘மீனவர்களுக்கு அவர்கள் பெற வேண்டிய உரிமையும் பாதுகாப்பும் வழங்கப்பட வேண்டும். கடற்றொழிற்துறையின் கௌரவமான வேலைத் திட்டத்தை அமைச்சு முழு மனதுடன் ஆதரிக்கிறது’ எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

சி188 ஐ உறுதிப்படுத்துதல் மற்றும் இணக்கம் வேலை நிலைமைகளை மேம்படுத்துவதில் மட்டுமல்லாமல், கூடுதல் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில், தொழிலாளர்  தக்கவைப்பை எளிதாக்குவதில், துறையின் உலகளாவிய போட்டித்தன்மையை மேம்படுத்துவதன் மூலம் இலங்கைக்கு கணிசமான பொருளாதார இலாபத்தையும் ஈட்டும். இது நாட்டின் கடற்றொழில் துறையின் நீண்டகால வளர்ச்சி மற்றும் நிலைபேறான தன்மைக்கு பேண்தகு அடித்தளத்தையும் அமைக்கிறது.

‘அனைத்து இலங்கையர்களுக்கும் செழிப்பான பொருளாதார வாய்ப்புகளை மேம்படுத்துவது ஆஸ்திரேலியாவின் இலங்கைக்கான அபிவிருத்து ஒத்துழைப்பின் முக்கிய அம்சமாகும். மீன்பிடித்துறை என்பது அபிவிருத்தி, கௌரவமான வேலை உருவாக்கம் என்பவற்றை விருத்திசெயும் ஒரு முக்கிய இயக்கியாகும் – நீல நண்டு, இராட்சத இறால் வகை மற்றும் கடல் அட்டை பெறுமதிச்சங்கிலிகளில் முதலீடுகள் வாழ்க்கைத்தரத்தையும் சம்பந்தப்பட்ட துறைகளையும் உயர்த்துவதில் பலன்களைப் பெற்றுள்ளன. அரசாங்கம் சி188 ஐ உறுதிப்படுத்துவதற்கான தனது பயணத்தில் முன்னேறும் என்று நாங்கள் நம்புகிறோம்’ என்று இலங்கைக்கான ஆஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் போல் ஸ்டீபன்ஸ் தெரிவித்தார்.

வரைவு விதிமுறைகளைப் பற்றி தீர்க்கமான விவரங்களைப் பெற, திறந்த விவாதங்களில் ஈடுபட, கண்ணோட்டங்களைப் பகிர்ந்து கொள்ள, சி188 ஐ உறுதிப்படுத்துவதற்கான இலங்கையின் பயணத்தில் முன்னேறும் வழியைப் புரிந்து கொள்ள பங்குதாரர்களுக்கு நுண்ணறிவு மன்றம் ஒரு தளத்தை வழங்கியது.

இந்த சமவாயத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த ஐஎல்ஓவின் இலங்கை மற்றும் மலைதீவுகள் நாடுகளுக்கான பணிப்பாளர் திருமதி சிம்ரின் சிங்,

‘ இலங்கை தனது பொருளாதார மீட்சி மற்றும் தாங்குதிறனை வலுப்படுத்த நடவடிக்கைகளை கையெடுக்கும் இக்காலகட்டத்தில், சி188 ஐ உறுதிப்படுத்துவதானது தொழிலாளர்களுக்கு கண்ணியத்தையும் பாதுகாப்பையும் வழங்குகிறது, மேலும் தொழில் துறை வளர்ச்சிக்கும் இலாபத்திற்கும் இதுவொரு பொன்னான வாய்ப்பாகும். கடற்றொழில் அமைச்சு மற்றும் தொழிலாளர் அமைச்சு ஆகிய இரு அமைச்சுகளினதும் அர்ப்பணிப்பு பாராட்டத்தக்கது. ஐஎல்ஓ வானது, சி188 ஐ உறுதிசெய்வதற்கான இலங்கையின் முயற்சிகளுக்கு தொடர்ந்தும் ஆதரவளிக்கும் என்று கூறினார்.

கடற்றொழில் அமைச்சும் தொழில் அமைச்சும் இணைந்து சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்தின் ஒருங்கிணைப்பு மற்றும் தொழில்நுட்ப ஆதரவுடனும் சி188 உறுதிப்படுத்தும் செயல்முறையை முன்னெடுக்கிறது.

சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனமானது தொழிலுலகிற்கான ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அமைப்பாகும். இது சர்வதேச தொழில் நியமங்கள் அமைக்கவும் வேலைவாய்ப்பு தொழிலாளர் உரிமைகள், மற்றும் சமூக பாதுகாப்பு தொடர்பான விடயங்களை தீர்த்துக்கொள்ள சமூக உரையாடலில் ஈடுபடுகின்றது, தொழில்நுட்ப உதவிகளை வழங்குகின்றது. சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனமானது சமூக நீதியை முன்னேற்றுவதற்கும் உலகளாவிய ரீதியில் கண்ணியமான தொழில்வாய்ப்புகளை மேம்படுத்துவதற்கான நோக்கங்களை அடையவும் அரசாங்கங்கள், தொழில் வழங்குநர்கள், தொழிலாளர் அமைப்புகள் மற்றும் பிற பங்குதாரர்களுடன் நெருக்கமாக இணைந்து பணியாற்றுகின்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.