உர மோசடிக்கு ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கப்படாதுள்ளது ? – சஜித் கேள்வி
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சியில் இரசாயன உரங்கள் ஒரே நேரத்தில் தடை செய்யப்பட்டு சேதன உரங்களைப் பயன்படுத்துவதற்கான தன்னிச்சையான முடிவால் நம் நாட்டிற்கு ஏற்பட்ட இழப்பு பாரியது என்றும், சில இழப்புகளை கணிப்பிட முடியாதுள்ளதாகவும்,இது தொடர்பாக, கணக்காய்வாளர் நாயக திணைக்களம் முறைப்படி மேற்கொண்ட கணிக்காய்வு அறிக்கையை 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 2 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து ஒரு வருடத்திற்கு மேல் கடந்திருந்தாலும், தற்போதைய ஜனாதிபதியோ அல்லது விவசாய அமைச்சரோ இது தொடர்பில் முறையான நடவடிக்கை எதனையும் எடுக்கவில்லை எனவும் எதிர்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
இந்த ஊழல்கள் மோசடிகள் போலவே அரசாங்கத்தில் நிலவு வரும் ஊழல் முறைகேடுகளுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், எந்த வித நடவடிக்கைகளும் எடுக்கப்படாததால் மக்கள் விரக்தியடைந்துள்ளனர் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
நிலையியற் கட்டளை 27 (2) இன் கீழ் இன்று திங்கட்கிழமை (11) பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மல உர மோசடி மற்றும் நானோ உரங்களை அதிக விலைக்கு இறக்குமதி செய்ததனால் நாடு பெருமளவு பணத்தை செலவழிக்க நேர்ந்ததாகவும்,கணக்காய்வு அறிக்கை தயாரிக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டாலும் அது இன்னும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
கணக்காய்வு அறிக்கையின் மூலம் நிரூபணமான இந்தக் குற்றச்சாட்டுகளை கோப் குழுவின் முன் கொண்டு வருவதில் காலதாமதம் ஏற்படுவதிலிருந்து இதற்கு காரணமானவர்களை அரசாங்கம் பாதுகாக்கிறது என்பது புலப்படுவதாகவும், இனிமேலும் இத்தரப்பினரை பாதுகாக்காமல் மக்களுக்கு நீதியை நிலைநாட்டுமாறும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு தெரிவித்தார்.
அரசாங்கம் உர மானியம் வழங்கினாலும் தேயிலை கொழுந்து, இலவங்கப்பட்டை, காய்கறிகள் மற்றும் பழங்கள் போன்ற அனைத்து பயிர்களுக்கும் பயன்படுத்தப்படும் விவசாய கருவிகள், இயந்திரங்கள், உரங்கள் மற்றும் ஏனைய உற்பத்திப் பொருட்கள் மீது வற்வரியை விதித்துள்ளதாகவும்,வற்வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், இது மக்களை நரகத்திற்கு இட்டுச் செல்லும் வற் வரி என்றும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.












கருத்துக்களேதுமில்லை