எரிபொருள்களின் விலைகள் அதிகரிப்பால் கடற்றொழிலாளர்பாதிப்புக்கு மாற்று திட்டம் அமைச்சர் டக்ளஸ் உத்தரவாதம்

எரிபொருள் விலையேற்றத்தால் கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கியுள்ள உற்பத்தி செலவு அதிகரிப்பை சமாளிப்பதற்கு மாற்று திட்டம் ஒன்றை விரைவில் அமுல்படுத்தவுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

மேலும், எரிபொருள் விலையேற்றத்தைச் சமாளிக்கும் வகையில் கடற்றொழிலாளர்களுக்கு மானியங்கள் வழங்கப்படுவதை சர்வதேச நாணய நிதியம் போன்ற சர்வதேச அமைப்புக்களும், இலங்கை கடலுணவுகள் ஏற்றுமதி செய்யப்படுகின்ற நாடுகளும் விரும்பாத நிலை காணப்படுவதால் மாற்றுத் திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகவும் கடற்றொழில் அமைச்சர் தெரிவித்தார்.

நாடாளுமன்றில் இடம்பெற்ற கடற்றொழில் அமைச்சு தொடர்பான வரவு செலவுத்  திட்ட விவாதத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா –

எமது கடற்றொழிலாளர்களின் தேசிய உற்பத்தியை ஊக்குவிப்பதற்கு இந்த வரவு – செலவுத் திட்டத்தில் வேறு வழிகளில் உதவுவது குறித்து ஜனாதிபதியுடன் கலந்துரையாடியுள்ளேன்.

அந்த வகையில், சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகள் திட்டத்தின் கீழான நிதி உதவியில் ஒதுக்கீடுகளை மேற்கொள்வதற்கு முடிவு செய்துள்ளேன்.

அதேவேளை, எமது விவசாய மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்ற சலுகைகளை கடற்றொழிலாளர்களுக்கும் வழங்க முடியும் என ஜனாதிபதி என்னிடம் தெரிவித்துள்ளார்.

மேலும், மாற்று மின்வலு – குறிப்பாக மின்கலம், காற்றாலை, பாய்மரம் மற்றும் சூரிய சக்தி கொண்ட மின் வலு கொண்டு கடற்றொழில் படகுகளை செயற்படுத்துவதற்கான முயற்சிகள் தொடர்பிலும் பரிசோதனைகளை மேற்கொண்டு, அது வெற்றியளித்துள்ளது. இதனை வெகு விரைவில் நடைமுறைப்படுத்தவுள்ளேன்.

இதேவேளை அறுவடைக்குப் பின்னரான பாதிப்புகளைக் குறைக்கின்ற வகையில் நவீன குளிர்சாதன கருவிக் கட்டமைப்பைப் பொருத்துவது தொடர்பில் பரிசோதனைகளை மேற்கொணண்டு வருகின்றோம். அதனடிப்படையில் உலக உணவு மற்றும் விவசாய அமைப்பின் உதவியுடன், கடற்றொழில் பலநாள் கலமொன்றில் இந்தக் கருவிக் கட்டமைப்பைப் பொருத்தி, அக்கலத்தினை ஒரு மாத காலம் கடற்றொழிலுக்கு அனுப்பி மேற்கொண்ட பரிசோதனை வெற்றியளித்திருக்கின்றது.

அந்த வகையில் தற்போது செயற்பாட்டில் இருக்கின்ற பலநாட் கலங்கள் அனைத்துக்கும் இக் கருவிக் கட்டமைப்பைப் பொருத்தவுள்ளோம்.

அத்துடன், இனிமேல் புதிதாகக் கட்டப்படுகின்ற பலநாள் கலங்களுக்கு இக் கருவி பொருத்தப்படுவது கட்டாயமாக்கப்படும். இக் கருவிக் கட்டமைப்பு இல்லையேல் புதிய பலநாள் கலங்களுக்கான அனுமதி வழங்கப்படமாட்டாது என்றும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.