கிரிக்கெட் சபையை கலைக்க முடியாது! அமைச்சர் ஹரின் திட்டவட்டம்

நாடாளுமன்றில் வெளியிடப்படும் எதிர்ப்புக்களை அடிப்படையாகக் கொண்டு, இலங்கை கிரிக்கெட் சபையை கலைக்க முடியாது என விளையாட்டுத் துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இலங்கை கிரிக்கெட் சபை தொடர்பாகக்  கருத்துத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ –

225 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமன்றி, ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இலங்கை கிரிக்கெட் சபையை உடனடியாக கலைக்க வேண்டும். – என வலியுறுத்தியிருந்தார்.

இந்நிலையில் சஜித் பிரேமதாஸ தெரிவித்த கருத்துக்கு பதிலளித்து உரையாற்றிய போதே ஹரீன் பெர்னான்டோ மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஹரீன் பெர்னாண்டோ மேலும் தெரிவிக்கையில் –

ஐ.சி.சி. தற்போது இலங்கை கிரிக்கெட் அணியை தடை செய்துள்ளது. இதனை விலக்கிக்கொள்ள நாம் அவர்களுடன் பேச்சு நடத்தி வருகிறோம்.

இந்த நிலையில், பிரபலமாவதற்காக கிரிக்கெட்டில் ஊழல் உள்ளதாக கூச்சலிட்டுக் கொண்டிருப்பதால், இந்தப் பிரச்சினை தீர்ந்துவிடப் போவதில்லை. இங்கு நாடாளுமன்றில் கூறும் கருத்துக்களை ஐ.சி.சி. ஏற்றும் கொள்ளாது.

இதனைப் புரிந்துக்கொள்ளாத எதிர்க்கட்சித் தலைவர் ஒருவர் இங்கே இருப்பதை நினைத்து நான் கவலையடைகிறேன்.

நாட்டில் நடைபெறவிருந்த 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான உலகக் கிண்ணத் தொடர்தான் இல்லாது போயுள்ளது.

கிரிக்கெட் சபையில் பல பிரச்சினைகள் உள்ளன. நான் கடந்த காலத்தில் விளையாட்டுத் துறை அமைச்சராக இருந்தபோதும் கூட, இடைக்கால நிர்வாக சபையொன்றை அமைக்க 3,4 தடவைகள் முயற்சித்தேன்.

ஆனால், ஐ.சி.சி. இதற்கு எதிர்ப்பை வெளியிட்டது. இந்த நிலையில், நாம் சித்திரஸ்ரீ அறிக்கைக்கு இணங்க விளையாட்டுச் சட்டத்தை முதலில் மாற்றியமைக்க வேண்டும். – இவ்வாறு ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.