தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் ஜனாதிபதிக்கு விடுத்துள்ள கோரிக்கை!

வற் வரி அதிகரிப்புடன், ஜனவரி மாதத்தில் பஸ் கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படலாம் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

எனவே, இது தொடர்பாக எதிர்காலத்தில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடவுள்ளதாக அந்தச் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன, ஜனவரி மாதம் முதல் பஸ்கள் இறக்குமதியின் போது, சராசரியாக பஸ் ஒன்றின் விலை ஒரு கோடியே 57 லட்சமாக உள்ளதாக அவர் தெரிவித்தார்.

வற் வரியின் 18 சதவீத அதிகரிப்புடன், குறைந்தபட்சம் 20 லட்சம் ரூபா விலையுடன் இந்த அதிகரிப்பு ஏற்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், உதிரிப் பாகங்களின் விலை, எண்ணெய் விலை, சேவைக் கட்டணங்கள் அனைத்தும் அதிகரிக்கின்றன என்றும் எரிபொருளின் மீது வற் வரி அறவிடப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதனால், டீசலின் விலையும் அதிகரிக்கும் என்பதால் மீண்டும் ஒருமுறை பஸ் கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய நிலை உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதனால், விரைவில் ஜனாதிபதி மற்றும் நிதி அமைச்சின் அதிகாரிகளுடன் இது தொடர்பாகக் கலந்துரையாடவுள்ளதாகவும் இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நிழற்படப் பிரிதிகளின் விலைகளில் அதிகரிப்பு ஏற்படும் என அகில இலங்கை தொடர்பாடல் வர்த்தக நிலைய உரிமையாளர்கள் சங்கமும் தெரிவித்துள்ளது.

வற் வரி அதிகரிப்பின் காரணமாக இந்த நிலை ஏற்படும் எனவும், இதனால், தாம் தொழில் நெருக்கடிக்கு முகங்கொடுக்க நேரிடும் எனவும் அச்சங்கம் கவலை வெளியிட்டுள்ளது.

நிழற்படப் பிரிதிகளின் விலைகளில் அதிகரிப்பு ஏற்படும் நிலையில் அது மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளைப் பாதிக்கும் எனவும் அகில இலங்கை தொடர்பாடல் வர்த்தக நிலைய உரிமையாளர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.