தனவந்தர்களை மேலும் செல்வந்தவர்களாக்கும் வரவு – செலவு திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது! எதிர்க்கட்சி தலைவர் சஜித் கவலை

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள 2024ஆம் ஆண்டுக்கான வரவு – செலவு திட்டம் தனவந்தர்களை மேலும் செல்வந்தவர்களாக்குவதாகவும், சாதாரண மக்களை உதாசீனப்படுத்தும் வகையிலுமே காணப்படுகிறது.

இதனால் சாதாரண மக்கள் எதிர்கொள்ளப் போகும் நெருக்கடிகள் கவலைக்குரியவையாகும் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

வரவு – செலவு திட்டம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் –

நாட்டிலுள்ள 220 இலட்சம் மக்கள் எதிர்நோக்கியுள்ள துயரத்தை எண்ணி கவலையடைகின்றோம். சாதாரண மக்களை மறந்து தனவந்தர்களை மேலும் செல்வந்தவர்களாக்கும் வரவு – செலவு திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளமை மிகவும் கவலைக்குரியது. இந்த வரவு – செலவு திட்டத்தின் மூலம் சாதாரண மக்களுக்கு எவ்வித நன்மையும் கிடைக்கப் போவதில்லை.

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து இரண்டாம் கட்ட கடன் தொகை மாத்திரம் கிடைத்தால் போதாது. இனிவரும் காலங்களில் எஞ்சிய கடன் தொகைகளையும் பெற்றுக் கொள்ள வேண்டியுள்ளது. மக்கள் எதிர்கொள்ள நேரிடவுள்ள துயரத்தை எண்ணிக் கவலையடைகின்றோம்.

ஊழலுக்கு எதிராக, ஊழலை ஒழிப்பதற்காக முன்னிற்கின்ற எவருக்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் கதவுகள் திறந்தே இருக்கும்.

முன்னாள் அமைச்சர் ரொஷான் ரணசிங்க சகல சலுகைகளையும் உதாசீனப்படுத்தி, கொள்கை ரீதியாக தீர்மானத்தை எடுத்துள்ளமை வரவேற்கத்தக்கது. – என்றார்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.