சர்வதேச நாணய நிதியத்தின் செயற்திட்டத்துக்கு உண்மையாக இருப்பின் உதவி தொடர்ந்து கிட்டும் மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் தெரிவிப்பு

நாம் சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்துக்கு உண்மையாக இருந்தால் மாத்திரமே, எதிர்வரும் காலங்களில் எந்தவொரு அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் இப்போது எமக்கு சலுகை அளிக்கும் நாடுகள் தொடர்ந்து அதனை வழங்கும். மாறாக நாம் இந்தத் திட்டத்திலிருந்து விலகுவதாக இருந்தால், வருடாந்தம் 6 பில்லியன் டொலர் கடன் தொகையை மீளச்செலுத்துவதற்கான இயலுமை எமக்கு இருக்கவேண்டும். இதனைக் பொதுமக்கள் புரிந்துகொள்வதும், அதற்கேற்றவாறு செயற்படுவதும் அவசியம் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க வலியுறுத்தியுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டம் தொடர்பில் கருத்து வெளியிட்டிருக்கும் அவர் மேலும் கூறியிருப்பவை வருமாறு –

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக நான் நியமிக்கப்படுவதற்கு முன்னர், முன்னாள் ஜனாதிபதி சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைக் கோரியிருந்தார். இருப்பினும் அதற்கான எந்தவொரு நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை. மாறாக ரூபாவின் பெறுமதி எவ்வித கட்டுப்பாடுமின்றி வீழ்ச்சியடைவதற்கு இடமளிக்கப்பட்டது.

சுமார் 6 பில்லியன் டொலர் பெறுமதியான கடன்களை மீளச்செலுத்தவேண்டியிருந்த போதிலும், அவ்வப்போதைய தேவைகளுக்குப் பயன்படுத்தக்கூடிய வகையில் கையிருப்பில் 25 மில்லியன் டொலர்கள் மாத்திரமே காணப்பட்டன.

குறுகிய காலத்தில் கடன்களை மீளச் செலுத்துவதற்குப் போதுமான நிதி இருக்கவில்லை. ஆகையால் கடன் மீள்செலுத்துகையைத் தற்காலிகமாக இடைநிறுத்துவதாக அரசாங்கம் அறிவித்ததுடன், அப்போதைய சூழ்நிலையில் அது மிகச் சிறந்த தீர்மானமாகக் காணப்பட்டது.

இருப்பினும் அப்போது அந்த அறிவிப்பு தொடர்பில் நாடு முழுவதும் பல்வேறு விவாதங்கள் இடம்பெற்றதை நான் அவதானித்தேன்.

இருப்பினும் நாம் அப்போது கடன் மீள்செலுத்துகை இடைநிறுத்தத்தை அறிவித்தோமே தவிர, வங்குரோத்து நிலையை அறிவிக்கவில்லை. உண்மையில் பார்த்தால் இவை இரண்டும் இரு வேறு சொற்பதங்களாகும்.

வங்குரோத்து நிலை என்பது கடன்களை மீளச்செலுத்த முடியாமை மற்றும் அக்கடன் மீள்செலுத்துகைக்காக நாட்டின் சொத்துக்களை விற்பனை செய்கின்ற நிலையாகும்.

எனவே, அவ்வங்குரோத்து நிலையைத் தடுப்பதற்காக நாம் தற்காலிக கடன் மீள்செலுத்துகை இடைநிறுத்தத்தை அறிவித்தோம். அதாவது கடன் மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படும் வரை கடன் மீள் செலுத்துகையைத் தற்காலிகமாக இடைநிறுத்தி வைப்பதாகும்.

எனது நிலைப்பாடு என்னவெனில், நாடு வங்குரோத்து நிலையை அடையவில்லை. கடன் மீள்செலுத்துகை இடைநிறுத்தம் தொடர்பில் தொலைபேசி வாயிலாகக் கடன் வழங்குநர்களுக்கு அறிவித்திருக்கலாம் எனவும், அதனைப் பகிரங்கமாக அறிவித்திருக்கவேண்டியதில்லை எனவும் சில குழுக்களின் கலந்துரையாடல்களில் கூறப்பட்டது. ஆனால் தொலைபேசி வாயிலாக கடன்மீள்செலுத்துகை இடைநிறுத்தப்பட்ட சம்பவங்கள் வரலாற்றில் இல்லை. மாறாக அது நகைப்புக்குரியதொரு விடயமாகவே இருக்கும்.

இவ்வாறானதொரு பின்னணியில் சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து நிதியுதவியைப் பெறுவதற்கு அப்பால், அதனிடமிருந்து இலங்கை தொடர்பில் உத்தரவாதத்தைப் பெறுவதே மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் காணப்பட்டது.

அதன்படி தற்போது சர்வதேச நாணய நிதியம் வழங்கியிருக்கும் உத்தரவாதத்தின்படி, இலங்கையின் கடன் மீள்செலுத்துகை ஆற்றல் முன்னேற்றமடைந்து வருவதாகக் கூறப்பட்டிருக்கின்றது.

அதேவேளை, நாம் சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து பணியாற்றுவதன் காரணமாக ஜப்பான், சீனா, இந்தியா மற்றும் பாரிஸ் கிளப் நாடுகள் என்பன இலங்கைக்குக் கடன் சலுகை வழங்குவதற்கு இணங்கியுள்ளன.

எனவே, கடன் மறுசீரமைப்பின் ஊடாக அடுத்த 10 ஆண்டுகளுக்கு 10 பில்லியன் டொலர்களுக்கும் மேற்பட்ட கடன் சலுகை (செலுத்தவேண்டிய கடன்களிலிருந்து 10 பில்லியன் டொலர்கள் கழிக்கப்படும்) எமக்குக் கிடைக்கப்பெறுமென எதிர்பார்க்கின்றோம்.

அதேவேளை நாம் சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்துக்கு உண்மையாக இருந்தால் மாத்திரமே, எதிர்வரும் காலங்களில் எந்தவொரு அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் இப்போது எமக்கு சலுகை அளிக்கும் நாடுகள் தொடர்ந்து அதனை வழங்கும்.

மாறாக, நாம் இந்தத் திட்டத்திலிருந்து விலகுவதாக இருந்தால், வருடாந்தம் 6 பில்லியன் டொலர் கடன் தொகையை மீளச்செலுத்துவதற்கான இயலுமை எமக்கு இருக்கவேண்டும். இதனை பொதுமக்கள் புரிந்துகொள்வதும், அதற்கேற்றவாறு செயற்படுவதும் அவசியமாகும். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.