மின்சாரசபை பொறியியலாளர் சங்கம் ஒரு தீவிரவாத அமைப்பு ஆகுமாம்!  அமைச்சர் காஞ்சன சாடுகிறார்

மின்சாரசபை பொறியியலாளர் சங்கம் என்பது தீவிரவாத சங்கமாகும். எந்தவொரு சங்கமும் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி தொடர்பில் முன்வைக்கும் பரிந்துரைகளையும் யோசனைகளையும் நாம் ஏற்றுக்கொள்வோம்.

ஆனால் அவற்றின் அழுத்தங்களுக்கும், அச்சுறுத்தல்களுக்கும் ஒருபோதும் அடிபணிய மாட்டோம் என மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் –

மின்சாரசபை பொறியியலாளர் சங்கம் என்பது தீவிரவாத சங்கமாகும். இலங்கை மின்சாரசபைக்குள் முழுமையாக தமது சர்வாதிகாரத்தைக் கட்டியெழுப்பிய சங்கமாகும்.

3 சந்தர்ப்பங்களில் மீள் புதுப்பிக்கத்தக்க சக்தி தொடர்பான சட்டமூலம் தொடர்பில் அவர்களுடன் கலந்துரையாடியதற்கான ஆதரங்கள் என்னிடம் உள்ளன. அதற்கான காணொளி பதிவுகளும் உள்ளன.

இந்த சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட போது நாட்டு மக்களுக்கு 8 மணித்தியாலங்கள் மின்சாரத்தை துண்டித்தது இந்த சங்கமே. நாம் மின் விநியோகத்தை துண்டிப்போம் என்பது அவர்கள் தெளிவாக அறிவித்தனர்.

இந்த சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டமைக்காகவே அவர்கள் இவ்வாறு செயற்பட்டனர்.

மீள் புதுப்பிக்கத்தக்க சக்தி திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவதற்கு புதிய இளம் அதிகாரிகள் குழு உள்ளது. அவர்கள் இதற்காக தமது முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்கியுள்ளனர்.

அவர்களுக்கு இடையூறை ஏற்படுத்தும் வகையிலேயே இந்த சங்கமும் செயற்படுகிறது.

மின்சாரசபை பொறியியலாளர்கள் சங்கம் 34 தொழிற்சங்கங்களில் ஒரு சங்கம் மாத்திரமேயாகும். இதுவரை இலங்கை மின்சாரசபையின் கட்டுப்பாட்டாளரை  நியமித்தது இந்த சங்கமே.

கடந்த ஆண்டிலிருந்து இதனை நாம் நிறுத்தியுள்ளோம். பொறியியலாளர் சங்கமானலும், வேறு எந்தவொரு சங்கமானாலும் யோசனைகள், பரிந்துரைகளை முன்வைக்க முடியும்.

அவற்றில் யதார்த்தமானவற்றை நாம் நடைமுறைப்படுத்துவோம். அதற்காக ஒன்று அல்லது இரண்டு தொழிற்சங்கங்களின் அச்சுறுத்தல்களுக்கு அடிபணிந்து செயற்படுவதற்கு நாம் தயாராக இல்லை. – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.