காற்றாலையும் கனிய மணல் அகழ்வும் மன்னார் மாவட்டத்தை சீர்குலைக்கிறது பொது அமைப்புக்களின் ஒன்றியம் ஜனாதிபதிக்கு அவசர கடிதம்

மன்னார் மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் காற்றாலை மின் உற்பத்தி மற்றும் கனிய மணல் அகழ்வு தொடர்பாக மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன்  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

அந்தக் கடிதத்தில் மேலும் குறிப்பிடுகையில் –

மன்னார் மாவட்டத்தின் தீவுப்பகுதி என்பது சாதாரண தரைத்தோற்றத்தில் இருந்து மிகவும் குறைவான தாழ் நிலப் பிரதேசம் ஆகும். வலிமை குறைந்த கனதியற்ற நொதியமுள்ள தீவு என்பதால் தான் மூன்று மாடிக்கு மேல் கட்டடம் அமைப்பதற்கு மன்னார் தீவு பகுதியில் அனுமதி வழங்குவதில்லை. ஐம்பது ஆண்டுகளில் நலிவுறும் தீவுகளில் மன்னாரும் ஒன்று என ஏலவே யுனெஸ்கோ நிறுவனம் முன்னெச்சரிக்கை விடுத்திருந்தது.

அவற்றை எல்லாம் கருத்தில் கொள்ளாமல் காற்றாலை அமைப்பதும் கனிய மண் அகழ்வதும் என்பது மேலும் தீவு பிரதேசத்தை பலவீனமான நிலைக்கு இட்டுச் செல்லும்.

உலகம் முழுவதும் மனிதர்களின் இயற்கைக்கு எதிரான செயற்பாட்டால் புவி வெப்பமயமாதல் அதிகரிப்பால் காலநிலை மாற்றம் ஏற்படுகிறது.

இதனால் பேரிடர் மூலம் கடல் நீர் மட்டம் உயரலாம். அதனால் பல தீவுகள் காணாமல் போகலாம் என்றும் அறிவியலாளர்களால் எச்சரிக்கப் பட்டுள்ளமையும் கவனிக்கத்தக்கது. டுபாய் காலநிலை மாநாட்டில் தாங்களும் பங்கேற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.

நில அதிர்வு, சுனாமியோ, பெரு வெள்ளமோ ஏற்பட்டால் தற்காத்துக் கொள்ளக்கூடிய நிலையில் வலிமையிழக்கவைக்கும் வேலைகள் தொடர்ந்து நடைபெறுகின்றன.

காற்றாலையும் கனிய மண் அகழ்வும் ஆழமாக துளையிட்டு நிலத்தடியை அதன் இயற்கை தரைத்தோற்ற இருப்பியல் ஒழுங்கமைப்பை சீர்குலைக்கும் வேலையே நடைபெறுகிறது.

இங்கு மிக நீண்ட காலமாக வசித்து வரும் மக்களுக்கு பெரும் வாழ்வியல் கேடாக மாறும். இயற்கையை அழித்து இயல்பை மாற்றி பணம் தேட முயல்வது தற்கொலைக்குச் சமமானது ஆகும். இங்கு வாழும் மக்களைப் பற்றிய எந்த விதமான நோக்கு நிலையும் இல்லாமல் ஆதாயம் தேட நினைப்பது அரசியல் இழுக்காகும்.

எனவே காலப்போக்கில் மன்னார் தீவு பகுதியில் இருந்து மனிதர்களை அப்புறப்படுத்தும் திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலாகவே நாம் இதனை நோக்க வேண்டியுள்ளது.

வருமானத்தை மட்டும் நோக்காகக் கொண்டு பல்தேசிய கம்பனிகளுக்கு மன்னார் வளத்தை கூறு போட்டு பெரு வணிகர்களிடம் கை அளித்திருப்பது நாட்டிற்கே பெரும் ஆபத்தை ஏற்படுத்துவதுடன் பூகோள ரீதியாக இந்த நாட்டின் மீது பிராந்திய வல்லரசுகளின் கழுகுப் பார்வைக்குள் அகப்பட்டிருப்பதாலும் வரலாற்று முக்கியத்துவ துறைமுக கட்டமைப்பைக் கொண்டதுமான இத்தீவு எதிர்காலத்தில் நாட்டின் ஏகபோகத்துவத்திற்கே பெரும் பாதிப்பை ஏற்படுத்தலாம்.

இந்த யதார்த்தங்கள் தங்களுக்குப் புரியாமல் அல்ல. ஆகவே கனியவள அகழ்வை முழுமையாக நிறுத்துவதுடன் புதிதாக அமைக்க இருக்கும். காற்றாலையை மன்னார் தீவுக்கு வெளியில் எவருக்கும் பாதிப்பு இல்லாத இடத்தில் நிறுவலாம். எனவே பொதுமக்களின் உணர்வுபூர்வமான தத்துவார்த்த அடிப்படை இருப்பியல் கோட்பாட்டுச் சித்தாந்தத்தை அறிவியல், சமூகவியல் ரீதியாகவும் ஏற்றுக் கொள்வீர்கள் என்று நம்புகின்றோம். இல்லையேல் பொதுமக்கள் தமது ஜனநாயக வழி எதிர்ப்பை இடைவிடாது வெளிப்படுத்துவார்கள்.

மக்களிடமுள்ள நீதி பூர்வமான வாழ்வியல் உரிமை சமூக சமநீதி கோட்பாட்டை ஏற்றுணர்ந்து கொள்வீர்கள்  என்றும் எமது நியாயமான வேண்டுகையை நிராகரிக்க மாட்டிர்கள் என நம்புகின்றோம். என குறித்த கடித்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.அதன் பிரதி இந்திய   உயர்ஸ்தானிகருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.