கடலோர வளங்கள் பாதுகாப்பு முகாமைத்துவம் போன்றவைக்கு ஐந்தாண்டுத் திட்டம் அறிவிப்பு!

கடலோர வளங்களின் பாதுகாப்பு மற்றும் முகாமைத்துவத்திற்காக ஐந்தாண்டு திட்டம் (2024-2029) வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கையின் கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர வள முகாமைத்துவத் திட்டம் (2024 – 2029) நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அவர்களிடம் புதன்கிழமை பத்தரமுல்லை செத்சிறிபாயவில் உள்ள அமைச்சின் கேட்போர் கூடத்தில் கையளிக்கப்பட்டது.

கரையோரப் பாதுகாப்பு மற்றும் கடலோர வள முகாமைத்துவச் சட்டத்தின் விதிகளின்படி, கடலோரப் பாதுகாப்பு மற்றும் கடலோர வள முகாமைத்துவத் திணைக்களம் கடலோர வளங்களின் பாதுகாப்பு மற்றும் முகாமைத்துவத்துக்கான திட்டத்தைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

மேலும் மாறிவரும் நிலைமைகளைக் கருத்தில்; கொண்டு ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் திட்டம் புதுப்பிக்கப்பட வேண்டும். கடந்த 2018 ஆம் ஆண்டு இந்த நாட்டில் கரையோர வளங்களைப் பாதுகாத்தல் மற்றும் முகாமைத்துவம் செய்வதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டது. அந்தத் திட்டத்தைப் புதுப்பித்து அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு (2024-2029) கடலோர வளங்களைப் பாதுகாப்பதற்கும் முகாமைத்துவம் செய்வதற்கும் இந்தத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டம் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவிடம் சமர்ப்பிக்கப்பட்டு அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட உள்ளது. அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்தவுடன் அடுத்த ஆண்டு முதல் கரையோர வளங்களை பாதுகாத்தல் மற்றும் முகாமைத்துவம் செய்வதற்கான ஐந்தாண்டு திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று கடலோர பாதுகாப்பு மற்றும் கரையோர வள முகாமைத்துவ திணைக்களம் மேலும் தெரிவித்தது.

எதிர்காலத்தில் கரையோரப் பிரதேசத்தில் கிடைக்கும் உயிரியல் மற்றும் பௌதீக வளங்கள் நாட்டின் அபிவிருத்திக்கு பங்களிக்கும் வகையில் நாடு மிகவும் திறம்பட கரையோர சுற்றுச்சூழலை பாதுகாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் மரபுகளுக்கு அப்பால் சென்று கடல் வளங்களில் இருந்து நாட்டை எவ்வாறு கட்டியெழுப்புவது என்பது குறித்து ஆழமாக சிந்திக்க வேண்டும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

நாட்டைச் சூழவுள்ள கடல் மற்றும் கரையோர சூழலை உரிய முறையில் முகாமைத்துவம் செய்வதன் மூலம் இந்தப் பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்க முடியும் என அமைச்சர் கூறினார். அதற்கான திட்டங்களைத் தயாரிக்கும் பணிகள் சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்கள் தொடர்பில் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன என அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் டபிள்யூ.எஸ்.சத்யானந்தா, இலங்கை கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர வள முகாமைத்துவ திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஆர்.ஏ.எஸ்.ரணவக்க ஆகியோர் கலந்துகொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.