பொலிஸ் விசேட சுற்றிவளைப்புகளில் 4 நாள்களில் 8 ஆயிரம் பேர் கைது! பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கருத்து

குற்றச்செயல்களில் ஈடுபடும் குழுக்களை ஒடுக்கும் விசேட வேலைத் திட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட நான்காம் நாள் சுற்றிவளைப்புகளில் 2,008 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுவரை மேற்கொள்ளப்பட்ட  சுற்றிவளைப்புகளில் 8,561 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் இதன்போது போதைப்பொருள் வர்த்தகர்களுக்கு சொந்தமான 92 மில்லியன் பெறுமதியான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன எனவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளாரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.

போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குழுக்களை ஒடுக்கும் விசேட வேலைத்திட்டம் பதில் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னக்கோனின் பணிப்புரைக்கு அமைய முப்படைகளின் ஒத்துழைப்புகளுடன் நாடளாவிய ரீதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல்  முன்னெடுக்கப்பட்டிருந்தது.

அதற்கமைவாக செவ்வாய்க்கிழமை அதிகாலை 12.30 மணி தொடக்கம் வியாழக்கிழமை அதிகாலை 12.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேர  சுற்றிவளைப்புகளில் 2,008 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன்,  இதுவரை நான்கு நாள் முடிவில்  8,561 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவற்றுள்  மாளிகாவத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லக்செவன அடுக்குமாடி குடியிருப்பில் முப்படையினர் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது போதைப்பொருள்களுடன் 31 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை போதைப்பொருள் விற்பனையாளர்களுக்கு சொந்தமான சுமார் 920 லட்சம் ரூபா பெறுமதியான சொத்துக்களை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவற்றுள் இரு பஸ்கள், இரு கார்கள், இரு மோட்டார் சைக்கிள்கள்,  4 காணிகள் மற்றும் வீடொன்றும் உள்ளடங்குவதாகவும் இந்த சொத்துக்களை சந்தேகநபர்கள் உறவினர் மற்றும் நண்பர்கள் பெயர்களில் கொள்வனவு செய்து அதனை  மறைத்து வைத்திருந்தனர் எனவும் இது தொடர்பில் சட்டவிரோத சொத்து விசாரணை பிரிவு விசாரணைகளை முன்னெடுத்து உள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.

இதனிடையே 2 கிலோ 400 கிராம் ஹெரோயின் போதைப் பொருள் ,ஒரு கிலோ 200 கிராம் ஐஸ், ஒரு கிலோ 200 கிராம் கஞ்சா, 12 கிராம் ஹஷீஷ், 5 கிலோ 200 கிராம் மாவா, 17,054 போதைப்பொருள் மாத்திரைகள் மற்றும் 73,833 கஞ்சா செடிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன என அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.