போதைப்பொருள் குறித்த 4665 பிரதான சந்தேகநபர்களின் பெயர்ப்பட்டியல் புலனாய்வுப்பிரிவினரால் வழங்கப்பட்டுள்ளது டிரான் அலஸ்  தகவல்

போதைப்பொருள் குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய 4665 பிரதான சந்தேகநபர்களின் பெயர்ப்பட்டியல் புலனாய்வுப்பிரிவினரால் வழங்கப்பட்டுள்ளது.

இவர்களில் கடந்த 4 நாள்களில் 731 சந்தேகநபர்களும், பெயர் பட்டியலில் இல்லாத 8458 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார்.

இந்த சுற்றிவளைப்புக்களில் இதுவரை  431 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருள்களும், 162 மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்களும் கைப்பற்றப்பட்டுள்ளன எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் –

வடக்கு, கிழக்கில் 30 ஆண்டு கால யுத்தத்தை நிறைவு செய்வதற்கு ஒத்துழைப்பு வழங்கியதைப் போன்று, நாடளாவிய ரீதியில் போதைப்பொருளுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் யுத்தத்துக்கும் மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

போதைப்பொருள் தொடர்பான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் போது 3 வகைகளின் கீழ் அவற்றுடன் தொடர்புடையவர்களின் பெயர்ப்பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

அவற்றில் முதலாவது பாரியளவில் போதைப்பொருள் கட்டத்தலில் ஈடுபடுபவர்களாவர். இரண்டாவது அவற்றை விநியோகிப்பவர்கள்.

மூன்றாவது போதைப்பொருள் பாவனையாளர்கள். நாம் போதைப்பொருள் பாவனையாளர்களை விடுத்து ஏனைய இரு பிரிவினரையும் இலக்காகக் கொண்டே எமது சுற்றுவளைப்புக்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

பிரதான போதைப்பொருள் கடத்தல் முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டால் அடுத்த இரு பிரிவினரையும் கட்டுப்படுத்துவது மிக இலகுவானதாகும்.

போதைப்பொருளை விநியோகிப்பவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய பாதாள உலகக் குழுவினர் தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

இவற்றை அடிப்படையாகக் கொண்டு புலனாய்வுப்பிரிவினரால் 4665 சந்தேகநபர்களை உள்ளடக்கிய பெயர்ப்பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய கடந்த 4 நாள்களில் இவர்களில் 731 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சுற்றிவளைப்புக்களின் போது பட்டியலில் இல்லாதவர்களும் கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்படுகின்றனர். இவ்வாறு ஒட்டு மொத்தமாக 8458 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். (புதன்கிழமை நள்ளிரவு 12 மணிவரை).

இவர்களில் 346 பேரை தடுத்து வைத்து விசாரிப்பதற்கான உத்தரவு பெறப்பட்டுள்ளது. 61 பேரிடம் சொத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

697 பேர் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். கடந்த 4 நாள்களில் கைப்பற்றப்பட்டுள்ள ஹெரோயின், ஐஸ், கொக்கைன், கஞ்சா, ஹஷீஸ் உள்ளிட்ட போதைப்பொருள்களின் பெறுமதி 431 மில்லியன் ரூபாவாகும்.

அதே போன்று கைப்பற்றப்பட்டுள்ள வாகனங்கள், காணி, கட்டடங்கள், தங்கம் மற்றும் பணம் என்பவற்றின் பெறுமதி 162 மில்லியன் ரூபாவாகும். இந்த சொத்துக்கள் அரசுடைமையாக்கப்படும்.

கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு காலங்களைத் தவிர்த்து ஏனைய அனைத்து நாள்களிலும் தொடர்ச்சியாக இந்த சுற்றிவளைப்புக்கள் முன்னெடுக்கப்படும்.

2024 ஜூன் 30 ஆம் திகதியாகும் போது போதைப்பொருள் பாவனை தொடர்பில் பாரிய மாற்றம் ஏற்பட்டிருக்க வேண்டும் என்பதே எமது இலக்காகும். எனவே இரு வாரங்களில் சுற்றிவளைப்புக்கள் நிறுத்தப்பட மாட்டாது.

எவ்வித அறிவிப்புக்களும் இன்றி விசேட அதிரடிப்படையினர் உள்ளிட்டோரை களமிறக்கி சுற்றி வளைப்புக்கள் முன்னெடுக்கப்பட்டால் மக்கள் மத்தியில் வீண் அச்சம் ஏற்படும்.

அதனைக் கருத்திக் கொண்டே முன்னரே அறிவித்து சுற்றிவளைப்புக்கள் முன்னெடுக்கப்பட்டன. பிரதான போதைப்பொருள் கட்டத்தல்காரர்களை தப்பிக்கச்செய்வது எமது நோக்கமல்ல. கைப்பற்றப்படும் போதைப்பொருள்களை மீள் ஏற்றுமதி செய்வது தொடர்பில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை.

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள்களை விநியோகிப்பவர்கள் தொடர்பான பெயர் பட்டியல் புலனாய்வு பிரிவினரால் எமக்கு வழங்கப்பட்டுள்ளது. இவர்களைக் கைது செய்வதற்கான சுற்றிவளைப்புக்களும் பிரத்தியேகமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.