தரமற்ற மருந்துகள் இறக்குமதி விவகாரம்: சாட்சிகளிருந்தால் ஹெகலிய கைதாவார்! அமைச்சர் டிரான் அலஸ் திட்டவட்டம்

தரமற்ற மருந்துகள் இறக்குமதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படும் விவகாரம் தொடர்பில் நிரூபிக்கப்பட்ட சாட்சிகள் இருக்குமாயின் முன்னாள் சுகாதார அமைச்சரும் கைது செய்யப்படுவார். எவ்வாறிருப்பினும் இவ்விடயங்களில் தனது தலையீடு எதுவும் இருக்காது என்று பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் –

நான் வழமையாக வேறு அமைச்சுக்கள் தொடர்பில் பேசுவதில்லை. தரமற்ற மருந்துகள் இறக்குமதி செய்யப்பட்டதாகக் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் குற்றப்புலனாய்வுப்பிரிவு விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது.

அதற்கமைய அவர்களின் விசாரணைகளில் முன்னாள் சுகாதார அமைச்சரும் தவறிழைத்துள்ளார் என்பதற்கு போதுமான சாட்சிகள் காணப்பட்டால் அவரையும் கைது செய்ய முடியும்.

ஆனால் அதற்கு நிரூபிக்கப்பட்ட சாட்சிகள் இருக்க வேண்டும். ஊடகங்களிலும், அரசியல் கட்சிகளிலும் கூச்சலிடப்படுகின்றது என்பதற்காக அமைச்சரை கைது செய்ய முடியாது. இது தொடர்பில் சிலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அதன் பின்னர் செயலாளரையும் கைது செய்ய வேண்டும் என்று ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டது. சந்தேகத்துக்கிடமான சாட்சிகள் கிடைத்துள்ளமையால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அதேபோன்று சாட்சிகள் கிடைத்தால் அமைச்சரும் கைது செய்யப்படுவார். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.