மக்களை எச்சரிக்கும் அறிவுறுத்தல்களை பொலிஸார் தரப்பில் வெளியிடவில்லையாம்! சமூகவலைத்தளப் பதிவுகள் குறித்து பொலிஸ் ஊடகப்பேச்சாளர்

தற்போதைய பொருளாதார நெருக்கடியை அடுத்து மக்களை எச்சரிக்கும் வகையிலான அறிவுறுத்தல்கள் எவற்றையும் தாம் வெளியிடவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

தற்போதைய பொருளாதார நெருக்கடியின் காரணமாக மக்களை மிகவும் அவதானமாக இருக்குமாறு இலங்கை பொலிஸாரால் அறிவுறுத்தப்பட்டிருப்பதாகவும், அதற்கமைய சில விடயங்கள் வலியுறுத்தப்பட்டிருப்பதாகவும் செய்திகளும், பதிவுகளும் பேஸ்புக் மற்றும் வட்ஸ் அப்  ஆகியவற்றில் பகிரப்பட்டுவருகின்றன.

இது தொடர்பாக இலங்கைப் பத்திரிகை ஸ்தாபனத்தைத் தளமாகக்கொண்டு இயங்கிவரும் ‘பக்ற் ஸ்பீக்கர்’ இனால் ஆராய்ந்து வெளியிடப்பட்டுள்ள தெளிவுபடுத்தலிலேயே மேற்கண்ட விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கைப் பொலிஸாரால் வெளியிடப்பட்டிருப்பதாகப் பகிரப்பட்டுவந்த பதிவுகளில் ‘விலையுயர்ந்த கடிகாரங்களை அணியாதீர்கள், விலையுயர்ந்த மாலைகள், வளையல்கள், காதணிகளை அணியாதீர்கள், உங்கள் கைப்பைகள் தொடர்பில் கவனமாக இருங்கள், ஆண்கள் விலையுயர்ந்த கைக்கடிகாரங்கள், விலையுயர்ந்த செயின்கள் அணிவதைத் தவிர்க்க வேண்டும், உங்கள் விலை உயர்ந்த கையடக்க தொலைபேசிகளை பொது இடங்களில் பயன்படுத்தாதீர்கள், அந்நியர்களை காரில் அழைத்துச் செல்வதை தவிர்க்கவும், தேவைக்கு அதிகமான பணத்தை எடுத்துச் செல்ல வேண்டாம், நீங்கள் பயணம் செய்யும் போது உங்கள் ஏ.டி.எம் மற்றும் கிரெடிட் கார்ட்களை பாதுகாப்பாக வைத்திருங்கள்’ ஆகிய அறிவுறுத்தல்கள் உள்ளடங்கியிருந்தன.

இதுகுறித்து பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவவிடம் ‘பக்ற் ஸ்பீக்கர்’ இனால் வினவப்பட்டபோது, இலங்கை பொலிஸ் திணைக்களத்தால் அவ்வாறான அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை என அவர் உறுதிப்படுத்தியுள்ளார். அதுமாத்திரமன்றி இந்த அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னர் சமூக வலைதளங்கள் ஊடாகப் பகிரப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.