13 திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு கூட்டமைப்பினரின் வலியுறுத்தல் வரவேற்கத்தக்கதே! ஈ.பி.டி.பி. ரங்கன் தெரிவிப்பு

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி நீண்டகாலமாக வலியுறுத்தி வந்த இலங்கை இந்திய ஒப்பந்தத்தை முழுமையாக அமுல்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கோரிக்கை விடுத்திருப்பதை வரவேற்பதாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் ஊடக பேச்சாளரும் யாழ். மாவட்ட உதவி நிர்வாக செயலாளருமான ஐயாத்துரை சிறீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் –

ஜனாதிபதி மற்றும் வடக்கு கிழக்கை பிரதிநிதித்துவம் செய்யும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது.

குறித்த சந்திப்பில் நல்லிணக்கம், காணி, மீள் குடியமர்தல், தமிழக அகதிமுகாமில் இருக்கும் இலங்கையர்களின் பிரச்சினைகள், அரசியல் தீர்வு விடயங்கள், வடக்கு – கிழக்கின் அபிவிருத்தி தொடர்பில் ஆராயப்பட்டபோது இலங்கை இந்திய ஒப்பந்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறும் தமிழ்த் தேசியக் கூட்டடைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் கோரிக்கை விடுத்திருந்தார் எனச் செய்திகள் வெளியாகியுள்ளன.

சுமார் 70 ஆண்டுகள் பழைமைவாய்ந்த மிதவாத கட்சிகள் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு தொடர்பில் அரசாங்கம்தான் தீர்வை முன்வைக்க வேண்டும் என வலியுறுத்தி வந்திருந்தன்.

ஆயினும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி தமிழ் மக்களின் அரசியல் தீர்வு தொடர்பில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக இலங்கை அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை ஆரம்ப படியாக கொண்டு எமது மக்களுக்கான அரசியல் தீர்வை நோக்கி நகர்வதற்கு அதனை நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்தி வந்தது.

‘ஆடிக்காற்றில் அம்மியும் பறக்கும்’ என்ற போதும், யுத்தம் வலுவான உச்ச நிலையில் இருந்தபோதும் நாம் இதனையே விடாப்பிடியாக வலியுறுத்திவந்திருக்கின்றோம்.

ஐ.நா மனித உரிமை பேரவையும் 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துமாறே கூறியிருக்கின்றது.

அரசியல் யாப்பில் உள்வாங்கப்பட்ட விடயமாக இருப்பதால் இதனை நடைமுறைப்படுத்துவதில் தடையேதும் இருக்கப்போவதில்லை.

ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் ஏனைய மிதவாத அரசியல் குழுக்களும் இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் 13 ஆவது அரசமைப்பை தும்புக்கட்டையால் கூட தொட்டுப்பார்க்க முடியாது என வீர முழக்கமிட்டனர்.

ஆனால் எமது தலைவர் டக்ளஸ் தேவானந்தா, மிக நீண்ட அரசியல் பார்வையுடனும் தீர்க்கதரிசனமாகவும் துல்லியமான முறையில் இலங்கை இந்திய ஒப்பந்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதுடன் 13 ஆவது அரசமைப்பை செயற்படுத்தி அதிலிருந்து மேலும் நாம் அதிகாரங்களை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதில் மிக தெளிவாக இருந்தார். அதனையே நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் நாடாளுமன்றத்திலும் வெளிநாடுகளின் தூதுவர்களிடமும் வலியுறுத்தியும் வந்திருந்தார்.

70 ஆண்டுகளுக்கு மேலான பழைமைவாத மிதவாத கட்சிகளும் பெரும் சட்டத்தரணிகளைக் கொண்டு அரசியல் நுட்பங்களை அறிந்த தத்துவ வித்தகர்களும் உள்ளதாகக் கூறப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும்  இதுவரைகாலமும் எந்தவிதான அரசியல் தீர்வையோ அல்லது அரசியல் பொதியையோ முன்வைத்திருக்கவில்லை.

தன்னாட்சி, சுயநிர்ணயம், தேசியம் என பேசிக்கொண்டிருந்தார்களே தவிர தமிழ் மக்களுக்கான ஒரு தீர்வைத் தேடிக்கண்டுபிடிக்கவில்லை. அதற்கான திட்டமும் அவர்களிடம் இருந்திருக்கவில்லை. தேர்தல் அரசியலை மட்டுமே இலக்காகக் கொண்டு நாளொரு பொய்யும் பொழுதொரு புழுகுமாக வீறாப்பாகவும் ஆக்ரோசமாகவும் அறிக்கைவிட்டுக்கொண்டிருந்தனர்.

ஆனால், தற்போது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி 30 ஆண்டுகளுக்கு மேலாக வலியுறுத்திவந்த வழிமுறையை பின்பற்றிய கூட்டமைப்பு நேரடியாக ஜனாதிபதியிடம் தமது நிலைப்பாட்டை முற்படுத்தியுள்ளனர்.

கடந்தகாலங்களில் கடைத்த பல வாய்ப்புகளைத் தவறவிட்டது போன்றல்லாது இந்த வாய்ப்பையாவது பயன்படுத்தி வெளிப்படைத் தன்மையுடனும் இதயசுத்தியுடனும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பங்காற்றுமாயின் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சிய அதனை முழுமையாக வரவேற்கும் என்றும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.