முல்லைத்தீவில் 7 நாட்களில் 113 போதைப்பொருள் பாவனையாளர்கள் உட்பட 250 பேர் கைது : 25 பேர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைப்பு!

நாடளாவிய ரீதியில் போதை ஒழிப்புத் திட்டத்தின் கீழ் பொலிஸாரால் விசேட சுற்றிவளைப்புகள், கைது நடவடிக்கைகள், போதைப்பொருட்கள் மீட்புச் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன.

இதேவேள‍ை சட்ட விரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் வகையில் பொலிஸாரினால்  முன்னெடுக்கப்படுகின்ற செயற்றிட்டத்தின் ஓர் அங்கமாகவே இன்று அதிகாலை 4.30 மணியளவில் முல்லைத்தீவில் சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டிருந்தது.

முல்லைத்தீவின் கள்ளப்பாடு, தீத்தக்கரை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடற்கரைகளில் அமைக்கப்பட்டுள்ள வாடிகளில் இன்று மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது போதைப்பொருள் பாவனையாளர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 6 நாட்களில் முல்லைத்தீவு மாவட்டத்தில் முல்லைத்தீவு, மாங்குளம், மல்லாவி, முள்ளியவளை, புதுக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான், வெலி ஓயா, ஐயன்கன்குளம், நட்டாங்கண்டல், கொக்குளாய் ஆகிய பொலிஸ் பிரிவுகளில் சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டன.

இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின்போது 3 கிராம் ஹெரோயின், 480 கிராம் ஐஸ், ஒரு கிலோ 855 கிராம் 39 மில்லி கிராம் கேரள கஞ்சா, 5 கஞ்சா செடிகள், 48 கிராம் வேறு வகையான போதைப்பொருட்கள், 443 லீற்றர் கசிப்பு, 1797 லீற்றர் கோடா உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளன.

அதேவேளை, போதைப்பொருள் பாவனையில் ஈடுபடும் 2 பெண்களும் 111 ஆண்களுமாக 113 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் அவர்களில் 25 பேர் புனர்வாழ்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் நிலைய தகவல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.