அரசின் நல்லிணக்க ஆணைக்குழுவுக்கு இன ஐக்கியத்துக்காக ஆதரவளிக்குக! சிறுபான்மை தரப்பினரிடம் நீதி அமைச்சர் கோரிக்கை

இனங்களுக்கு இடையிலான ஐக்கியத்தை உறுதிப்படுத்தி சிறந்தவொரு இலங்கையைக் கட்டியெழுப்புவதை நோக்காகக் கொண்டே உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு ஸ்தாபிக்கப்படவுள்ளதாக நீதி சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.

அத்துடன், இம்முயற்சிக்கு அனைத்து தமிழ்த் தரப்புக்கள் உட்பட அனைத்து சிறுபான்மைத் தரப்பினரும் முழுமையான ஆதரவை வழங்குமாறு பகிரங்கமாகக் கோருவதாகத் தெரிவித்துள்ள அவர், எதிர்வரும் ஜனவரியில் ஆணைக்குழு குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவுக்கான சட்டமூல வரைவு தயாரிப்பு மற்றும் அடுத்தகட்டச் செயற்பாடுகள் தொடர்பில் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் –

நாட்டின் எதிர்காலத்தைக் கருதி மிக முக்கியமான சட்ட வரைவொன்றைத் தயாரித்து வருகின்றோம். குறிப்பாக, இனங்களுக்கு இடையில் ஐக்கியத்தை ஏற்படுத்தி சகவாழ்வை உறுதிப்படுத்துவதே இதன் பிரதான நோக்கமாக உள்ளது.

அதன் அடிப்படையில் உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. அச்சட்டமூலத்துக்கான வரைவு எதிர்வரும் ஜனவரி மாதம் வர்த்தமானி ஊடாக வெளியிடப்படவுள்ளது.

அதன் அடிப்படையில் சட்டமூலம் தொடர்பில் அனைத்து தரப்பினரது கருத்துக்களையும் கேட்டறிந்து அவசியம் ஏற்பட்டால் திருத்தங்களை மேற்கொண்டு, அதற்கு நாடாளுமன்ற அங்கீகாரம் பெறப்படவுள்ளது. இந்தச் செயற்பாடானது, தேசிய முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

இனங்களுக்கு இடையில் நீடித்துக்கொண்டிருக்கும் முரண்பாடுகளைக் களைவதற்கு ஏற்பட்டுள்ள சந்தர்ப்பம் ஒன்றாகவே பார்க்கின்றேன்.

விசேடமாக எதிர்கால சந்ததியினர் உள்நாட்டில் தமது எதிர்காலம் தொடர்பில் சந்தேகங்களைக் கொண்டிருக்கின்ற தற்போதைய சூழலில் மிகவும் முக்கியமானதொரு பணி முன்னெடுக்கப்படுகிறது.

ஆகவே, இந்தச் செயற்பாட்டுக்கு விசேடமாக வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் பிரதிநிதிகள் முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும். அதுமட்டுமன்றி, முஸ்லிம், மலையக கட்சிகளின் பிரதிநிதிகளும் ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும்.

என்னைப் பொறுத்தவரையில், இதுகால வரையிலும் எந்தவொரு ஆட்சியாளரைப் பாதுகாக்கின்ற வகையிலோ அல்லது இனக்குழுமத்தை, தனிநபர்களை இலக்குவைத்து சட்ட வரைவுகளைச் செய்ததில்லை. எதிர்காலத்திலும் அதனைச் செய்யப்போவதுமில்லை.

ஆகவே, வர்த்தமானி அறிவித்தலின் பின்னர், அனைத்து தரப்பினரும் தமது கருத்துக்களை வெளியிட முடியும். அவற்றை ஆராய்ந்து சட்டமூலத்தின் தேவை ஏற்பட்டால் திருத்தங்களை மேற்கொண்டு நிறைவேற்றுவதற்குத் தயாராகவே உள்ளேன்.

அதுமட்டுமன்றி, கடந்த 21ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற வடக்கு, கிழக்கு பிரதிநிதிகளுடனான சந்திப்பின்போது இந்த விடயம் சம்பந்தமாகக் கலந்துரையாடப்பட்டது. அச்சமயத்தில் நேர்மறையான பிரதிபலிப்புக்களே கிடைத்துள்ளன. யாரும் எதிர்த்திருக்கவில்லை.

ஆகவே, தொடர்ச்சியான காலத்தில் இந்த விடயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்வதற்கு அனைத்து தரப்பினரும் பங்கேற்புடன் ஒத்துழைப்புக்களை வழங்கி ஆதரவளிக்க வேண்டும் என்று பகிரங்கமாக கேட்டுக்கொள்கின்றேன். – என்றார்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.