அரசியல் தீர்வு, பொறுப்புக்கூறல் நிலைப்பாடுகளில் மாற்றமில்லை!  உலகத்தமிழர் பேரவை கருத்து

பௌத்த தேரர்கள் ஊடாக முன்னெடுக்கப்பட்டு வரும் தேசிய கலந்துரையாடல் மூலம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை தக்கவைத்துக்கொள்வது எமது நோக்கமல்ல என்று உலகத் தமிழர் பேரவையின் ஊடகப்பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் தெரிவித்தார்.

அத்துடன், அரசியல் தீர்வு மற்றும் பொறுப்புக்கூறல் உள்ளிட்ட விடயங்களில் உலகத்தமிழர் பேரவையின் கடந்தகால நிலைப்பாடுகளில் எவ்விதமான மாற்றங்களுமில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், இமயமலைப்பிரகடனத்தின் அடுத்தகட்டமாக, 25 மாவட்டங்களிலும் சர்வமதக் குழுக்கள் ஸ்தாபிக்கப்பட்டு ஜனவரி முதல் கலந்துரையாடல்கள் நடைபெறவுள்ளதோடு புலம்பெயர் தரப்பினருக்கும், பௌத்த தேரர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல்களும் சமாந்தரமாக முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இலங்கைக்கு விஜயம் செய்திருந்த உலகத்தமிழர் பேரவையினர் இமயமலைப்பிரடகனத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உட்பட பல்வேறு தரப்பினரிடத்திலும் கையளித்துவிட்டு வெளியேறியுள்ளனர். அதனை அடுத்து அவர்கள் முன்னெடுக்கவுள்ள செயற்றிட்டங்கள் மற்றும் உலகத்தமிழர் பேரவையின் செயற்பாடுகள் தொடர்பில் மேலெழுந்துள்ள விமர்சனங்கள் தொடர்பில் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் –

இலங்கைக்கு விஜயம் செய்திருந்த நாம், சிறந்த இலங்கைக்கான சங்க மன்றத்தினருடன் இணைந்து ஜனாதிபதி, பௌத்த பீடாதிபதிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாடியிருந்தோம். இந்தக் கலந்துரையாடலின்போது இமயமலைப்பிரகடனத்தை அனைவருக்கும் கையளித்திருந்தோம். குறிப்பாக, இந்த முயற்சி இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்த பேச்சு அல்ல. மாறாக அப்பேச்சுக்கு செல்வதற்கு காணப்படுகின்ற எதிர்ப்புக்களைக் களைவதாகும்.

விசேடமாக, பௌத்த தேரர்கள் தமிழர்களின் விடயங்கள் தொடர்பிலான முன்னெடுப்புக்களை எதிர்க்கின்றார்கள் என்ற நிலைமைகள் தீவிரமாகக் காணப்படுகின்ற நிலையில், அவர்கள் ஊடாக தேசிய கலந்துரையாடலொன்றை மேற்கொள்வதே எமது நோக்கமாகும்.

இந்தக் கலந்துரையாடலின் அடிப்படையில் எதிர்மறையான நிலைப்பாட்டில் உள்ள பெரும்பான்மையானவர்களின் நிலைப்பாடுகளை மாற்றியமைத்து அவர்களின் சந்தேகங்களைக் களைந்து தேசிய நல்லுறவொன்றை உருவாக்குவதே நோக்கமாகும்.

அதேபோன்று, இலங்கையில் உள்ள பௌத்த பீடங்களில் அங்கத்துவத்தைக் கொண்டிருக்கின்ற தேரர்கள் குழுவை விரைவில் வெளிநாடுகளில் உள்ள புலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் பொதுமக்களுடன் திறந்தவெளி கலந்துரையாடலை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவுள்ளோம்.

அதேநேரம், உள்நாட்டில் தேரர்கள் மற்றும் ஏனைய சமயத்தலைவர்களையும் உள்ளடக்கிய சர்வமதக்குழுவை மாவட்டங்கள் தோறும் ஸ்தாபித்து தேசிய கலந்துரையாடல் செயற்பாட்டை தொடர்ச்சியாக முன்னெடுக்கவுள்ளோம்.

இதேநேரம், அரசியல்தீர்வு தொடர்பான விடயத்தை உள்நாட்டில் உள்ள அரசியல் தலைவர்களே கையாள்வார்கள். பெரும்பான்மையானவர்கள் அந்த முயற்சிக்கு தடையாக இருக்கும் நிலைப்பாட்டை மாற்றியமைப்பதே எமது கலந்துரையாடலின் நோக்கமாகும்.

இதேவேளை, நாங்கள் ரணில் விக்கிரமசிங்கவை தக்கவைத்துக்கொள்வதற்காக செயற்படுவதாகவும், எமக்கு யார் இனப்பிரச்சினை தொடர்பில் பேசுவதற்கான அங்கீகாரத்தை அளிப்பது தொடர்பிலும் பல விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. எம்மைப் பொறுத்தவரையில் இந்த விமர்சனங்கள் தேவையற்றவை.

அத்துடன் அவை புரிதலற்ற வகையில் முன்வைக்கப்படுபவை. நாம் இனப்பிரச்சினைக்கான தீர்வு பற்றி பேச்சுகளை முன்னெடுப்பதற்காக இலங்கைக்கு வருகை தரவில்லை. தேரர்களுடன் இணைந்த செயற்பாட்டை நாட்டின் தலைவர் என்ற வகையில் ஜனாதிபதிக்கும், ஏனைய அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும், பௌத்த பீடாதிபதிக்களுக்கும், சிவில் அமைப்பினருக்கும் தெரியப்படுத்தவே முனைந்தோம்.

அதேநேரம், உலகத்தமிழர் பேரவையைப் பொறுத்தவரையில் இனப்பிரச்சினைக்கான நிரந்தரமான தீர்வு, மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவை முக்கியமான இருவேறு விடயங்கள்.

அந்த விடயங்களில் எமது நிலைப்பாடுகளில் மாற்றமில்லை. விசேடமாக பொறுப்புக்கூறல் விடயத்தில் மனிதாபிமான மற்றும மனித உரிமைகள் சட்ட மீறல்கள் சம்பந்தமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்க வேண்டும் என்பதில் உறுதியாகவே உள்ளோம். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.