தேசபந்து தென்னகோன் குறித்த உயர்நீதிமன்றத் தீர்ப்பு: அடுத்தகட்ட நடவடிக்கைகள் பற்;றி உபகுழு ஆராய்கிறது! சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் தகவல்

பதில் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனுடன் தொடர்புடைய வழக்கில் உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை அடிப்படையாகக்கொண்டு முன்னெடுக்கக்கூடிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து தமது உபகுழு ஆராய்ந்து வருவதாகவும், அதனைத்தொடர்ந்து உரிய பரிந்துரைகள் முன்வைக்கப்படும் எனவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி கௌஷல்ய நவரத்ன தெரிவித்துள்ளார்.

கடந்த 2011 ஆம் ஆண்டு நபரொருவரை சட்டவிரோதமாகக் கைதுசெய்து, தடுத்துவைத்து, சித்திரவதைக்கு உட்படுத்திய குற்றத்துக்காக தற்போதைய பதில் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் உள்ளடங்கலாக 4 பொலிஸ் அதிகாரிகள் மேற்கூறப்பட்ட சித்திரவதையால் பாதிக்கப்பட்ட நபருக்கு தலா 5 லட்சம் ரூபாவை நட்டஈடாக செலுத்தவேண்டுமென கடந்த இருவாரங்களுக்கு முன்னர் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அதனையடுத்து நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள சில வழக்குகளுடன் தொடர்புபட்டிருக்கும் தேசபந்து தென்னகோன் ஜனாதிபதியால் பதில் பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டமை தொடர்பில் கரிசனையை வெளிப்படுத்திய சட்டத்தரணிகள் கூட்டிணைவு, அதற்கு அரசமைப்புப்பேரவை எவ்வாறு அனுமதியளித்தது எனவும் கேள்வி எழுப்பியிருந்தது.

இவ்வாறானதொரு பின்னணியில் இதுகுறித்துக் கருத்து வெளியிட்ட இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி கௌஷல்ய நவரத்ன, இவ்விடயம் குறித்து தமது உபகுழு ஆராய்ந்துவருவதாகத் தெரிவித்தார். அந்த உபகுழுவின் அறிக்கை கிடைக்கப்பெற்றதன் பின்னரேயே அடுத்தகட்டமாக முன்னெடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான பரிந்துரைகளை வெளியிடுவதற்கு எதிர்பார்த்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதேவேளை தேசபந்து தென்னகோன் சித்திரவதை தொடர்பான வழக்கில் நாட்டின் அதியுயர் கட்டமைப்பான உயர்நீதிமன்றத்தால் குற்றவாளியாக அடையாளங்காணப்பட்டிருக்கிறார் எனவும், எனவே அவர் அரசசேவையில் உயர்பதவியை வகிக்கமுடியுமா என்பது கேள்விக்குரிய விடயமே எனவும் கௌஷல்ய நவரத்ன ஏற்கனவே சுட்டிக்காட்டியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.