பொதுஜன பெரமுனவில் பிளவுபட்ட புதிய அரசியல் கூட்டணி உதயம்! அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவிப்பு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மீது அதிருப்தியடைந்த ஆளும் கட்சி உறுப்பினர்களின் புதிய மாற்று அரசியல் கூட்டணி திங்கட்கிழமை அங்குரார்ப்பணம் செய்யப்பட உள்ளதாக தெரிவித்த அந்த கூட்டணியின் செயற்பாட்டு தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் அநுர பிரியதர்ஷ யாப்பா, நாட்டையும் மக்களையும் நேசிக்கும் தலைவரை உத்தேச ஜனாதிபதி தேர்தலில் ஆதரிப்பதே எமது கூட்டணியின் பிரதான நோக்கம் என்றும் கூறினார்.

2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்ற தேர்தல்கள் உள்ளிட்ட புதிய அரசியல் கூட்டணியின் சமகால செயல்பாடுகள் குறித்து தெளிவுபடுத்தும் போதே அநுர பிரியதர்ஷ யாபா மேற்கண்டவாறு கூறினார்.

அவர் தொடர்ந்தும் குறிப்பிகையில் –

நாட்டில் பொருளாதார மற்றும் அரசியல் நிலைமைகள் படுமோசமாக சீரழிவுகளை எதிர்கொண்ட சந்தர்ப்பத்திலேயே எமது புதிய அரசியல் கூட்டணி உருவாக்கும் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டன.

இந்தக் கூட்டணியில் உள்ள உறுப்பினர்கள் அனைவருமே பொதுவாகவே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்களாகவும் பங்காளி கட்சிகளின் அங்கத்தவர்களாகவுமே உள்ளனர். சிறந்த ஒரு நாட்டை உருவாக்கும் நோக்கில் பொதுஜன பெரமுனவை ஆதரித்திருந்தோம்.

ஆனால், ஆட்சிக்கு வந்த பின்னர் பொதுஜன பெரமுனவின் செயற்பாடுகள் நாட்டின் நலன் கருதி இல்லாது, வீண் நெருக்கடிகளை தோற்றுவிக்கும் வகையிலேயே காணப்பட்டது.

எனவே, தான் பொதுஜன பெரமுனவிடமிருந்து விலகி சுயாதீனமாக செயற்பட பலரும் தீர்மானித்தனர். அவ்வாறு சுயாதீனமான பலரும் எம்முடன் இணைந்து புதிய அரசியல் கூட்டணியை உருவாக்கியுள்ளர்.

இதில் பொதுஜன பெரமுன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உள்ளிட்ட பல கட்சிகளின் உறுப்பினர்கள் உள்ளடங்குகின்றனர்.

இவர்கள் அனைவருமே அரசியலுக்கு அப்பால் நாட்டையும் மக்களையும் நேசிப்பவர்கள். அடுத்து வரக்கூடிய ஜனாதிபதித் தேர்தலில் எமது அரசியல் கூட்டணி  சிறப்பாக செயற்பட்டு சிறந்த ஒரு தலைவரை நாட்டிற்காகத் தெரிவு செய்ய பங்களிப்பு செய்யும்.

அதற்காக பல்வேறு தரப்புகளுடன் ஏற்கனவே பேசப்பட்டுள்ளதுடன் அவர்களை ஓரணிப்படுத்தும் செயற்பாடுகள் நிறைவுக்கண்டுள்ளன. நாட்டின் பொருளாதாரத்தை மீட்கக் கூடிய – மக்களை நேசிக்க கூடிய – அமைதியை விரும்பக் கூடிய ஒருவரே அடுத்த தலைவராக தெரிவு செய்யப்படவேண்டும்.

இதனை இலக்காக கொண்ட எமது கூட்டணி திங்கட்கிழமை அங்குரார்ப்பணம் செய்யப்பட உள்ளது. ராஜகிரிய, லேக் ட்ரைவ் வீதியில் அமைந்துள்ள புதிய அரசியல் கூட்டணியின் அலுவலகத்திலேயே இந்த விசேட நிகழ்வுகள் இடம்பெறவுள்ளது. கூட்டணியின் அங்குராப்பண நிகழ்வின் போது தேர்தல் பிரசார நடவடிக்கைகள் மற்றும் ஏனைய அரசியல் செயல்பாடுகள் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று கூறினார்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.