ஐக்கிய மக்கள் சக்தியின் மாற்றத்தை கண்டு அஞ்சுகிறார் ஜனாதிபதி ரணில்! சஜித் பெருமிதம்

ஐக்கிய மக்கள் சக்தி பரந்த கூட்டணியாக மாற்றமடைவதைக் கண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அச்சமடைமந்துள்ளார். அதன் காரணமாகவே ஊடக வலையமைப்புக்கள் ஊடாக எமக்கெதிரான பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இவ்வாறு எந்த முயற்சிகளை முன்னெடுத்தாலும் எமது உயர்வைத் தடுக்க முடியாது என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

மாத்தறையில் இடம்பெற்ற ஜவய உள்ளூராட்சி மன்றப் பிரதிநிதிகளுடனான சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர் –

ஐக்கிய மக்கள் சக்தி பரந்த கூட்டணியாக மாறுவதற்கு அஞ்சி, உறவினர்கள் மற்றும் நண்பர்களின் ஊடக வலையமைப்புக்களைப் பயன்படுத்தி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தவறான தகவல்களைப் பரப்பி வருகின்றார். இவ்வாறு எந்த முயற்சிகளை முன்னெடுத்தாலும் ஐக்கிய மக்கள் சக்தி பரந்த கூட்டணியமைப்பதை எவராலும் தடுக்க முடியாது.

நாடு வங்குரோத்தடைந்துள்ள நிலையில், மக்களின் வாழ்வாதாரம் சீர்குலைந்துள்ளது. இவ்வாறான நிலையிலும் கூட மக்களுக்கு வழங்கப்படும் இலவச மருந்துகளில் மோசடிகள் இடம்பெறுகின்றன. முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையைத் தோற்கடித்த அனைவரும் இதற்குப் பொறுப்புக் கூற வேண்டும்.

நாட்டில் நீதி, நியாயம் மற்றும் உண்மையின் வெற்றிக்காக ஐக்கிய மக்கள் சக்தி என்றும் முன்நிற்கும். துப்பாக்கி ஏந்திய நரியின் முன் மண்டியிடும் நபர்கள் ஐக்கிய மக்கள் சக்தியில் இல்லை. வருமானத்தை ஈட்டுவதற்கு சரியான தொலைநோக்குப் பார்வையும் வேலைத்திட்டமும் இருக்க வேண்டும்.

எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு இந்த வேலைத்திட்டத்தை எவ்வாறு முன்னெடுக்க வேண்டும் என்பதை ஐக்கிய மக்கள் சக்தி நிரூபித்துள்ளது. நாட்டை வங்குரோத்தாக்கியவர்கள் யார் என்பதை நாம் நீதிமன்றத்தில் வெளிப்படுத்தியுள்ளோம். எனவே அதற்குக் காரணமானவர்கள் மீது பாதிக்கப்பட்ட மக்கள் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்து, இழப்பீட்டை பெற்றுக்கொள்ளலாம். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.