தர்மத்தின் அடிப்படையில் மக்களை நேசிக்கும் ஆட்சியாளர்களை நாம் உருவாக்க வேண்டும்! புதுவருடச் செய்தியில் கலாநிதி ஆறு.திருமுருகன் வலியுறுத்து

எவர் ஆட்சியில் இருந்தாலும் தர்மத்தின் அடிப்படையில் மக்களை நேசிக்கவேண்டும். உண்மையான சத்திய ஆட்சி உருவாக வேண்டும். எல்லா மக்களுக்கும் பூரண சுதந்திரம் கிட்ட வேண்டும்.

– இவ்வாறு தனது புத்தாண்டுச் செய்தியில் தெரிவித்துள்ளார் அகில இலங்கை இந்துமாமன்றத்தின் உப தலைவரும் தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானம், சிவபூமி அறக்கட்டளை ஆகியவற்றின் தலைவருமான கலாநிதி ஆறு.திருமுருகன்.

அவர் தனது செய்தியில் மேலும் தெரிவித்தவை வருமாறு –

அன்பர்கள் அனைவருக்கும் இதயபூர்வமான புத்தாண்டு வாழ்த்துக்கள்.
காலம் வேகமாகக் கடக்கிறது. மனிதர்களாகிய நாம் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு இறைவன் பல வழிகளைத் தந்துள்ளான். மனித வாழ்வில் நாம் சாதிக்கக் கூடியவை ஏராளம். நல்ல விடயங்களை சாதித்த மனிதர்கள் நமக்கு உதாரணமாக விளங்குகிறார்கள்.

எனவே நாம் முயற்சியுடையவர்களாகத் திகழ வேண்டும். 2023 விடைபெற்றுவிட்டது 2024 இன்று பிறந்து விட்டது. புதிய ஆண்டில் நல்ல விடயங்களைச் செய்வதற்கு நாம் திட்டமிடுவோம். எமது திட்டங்களை நிறைவேற்றுவதற்கு நாம் இயன்ற முயற்சியை மேற்கொள்வோம். காலம் பெறுமதியானது. காலத்தை வீணாக்காதீர்கள் சென்ற நாள் திரும்பி வராது. பழையவற்றை எண்ணிக் கலங்காது புதியவற்றை சாதிப்பதற்கு ஆயத்தமாவோம்.

எம் மண்ணில் நல்லவையே நடக்க வேண்டுமென்று பிரார்த்திப்போம். அறம் செய்யாத ஆட்சி நிலைப்பதில்லை. எவர் ஆட்சியில் இருந்தாலும் தர்மத்தின் அடிப்படையில் மக்களை நேசிக்கவேண்டும். உண்மையான சத்திய ஆட்சி உருவாக வேண்டும். எல்லா மக்களுக்கும் பூரண சுதந்திரம் கிட்ட வேண்டும். தேவையற்ற ஆடம்பரங்களை எம்மக்கள் தவிர்க்க வேண்டும். இளைய தலைமுறையை நல்வழிப்படுத்துவதற்கு அவர்களுக்கு வழிகாட்டியாகத் திகழ்வோர் முன் உதாரணமாக செயற்பட வேண்டும். எல்லோரும் இன்புற்று வாழ்வதற்கு இனிய வழியில் வாழ முற்படுவோம். புதிய ஆண்டு புது மனிதர்களாக எம் பணி தொடர்வோம். – என்றுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.