உயிர் காப்பு மருந்துகளுக்கு எவ்வித தட்டுப்பாடும் இல்லை! சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவிப்பு

நாட்டில் பதிவு செய்யப்பட்ட 850 அத்தியாவசிய மருந்துகளில், உயிர் காப்பு மருந்துகளுக்கு எவ்வித தட்டுப்பாடும் இல்லை. தட்டுப்பாடு காணப்படும் மருந்துகளைப் பெற்றுக் கொள்வதற்கான சகல வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளன என சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.

ஜே.என்.1 பிறழ்வு தொடர்பில் சுகாதார அமைச்சு உன்னிப்பாக அவதானித்து வருவதாகத் தெரிவித்த அமைச்சர், காய்ச்சல், தடிமன் போன்ற அறிகுறிகளுடன் வைத்தியசாலைகளில் சேர்க்கப்படும் நோயாளர்களின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன எனவும் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் –

தற்போது நாட்டில் பதிவு செய்யப்பட்ட 850 அத்தியாவசிய மருந்துகள் காணப்படுகின்றன. அவற்றில் உயிர் பாதுகாப்பு மருந்துகளுக்கு எவ்வித தட்டுப்பாடும் இல்லை. தட்டுப்பாடுகள் காணப்படும் மருந்துப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. அதே போன்று அத்தியாவசிய மருத்துவ உபகரணங்கள் தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

5 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் மத்தியில் தீவிரமடைந்திருந்த மந்த போஷனையைக் கட்டுப்படுத்துவதற்கு யுனிசெப், உலக சுகாதார ஸ்தாபனம் உள்ளிட்ட நிறுவனங்களுடன் இணைந்து பல வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. அதற்கமைய குறுகிய காலத்துக்குள் ஏற்படும் மந்த போஷனை நிலைமை தற்போது குறைவடைந்துள்ளது.

இதே வேளை தொற்றா நோய்கள், தொற்று நோய்கள் தொடர்பிலும் விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு டெங்கு நோய் காரணமாக 50 மரணங்கள் பதிவாகியிருந்தன. இவ்வாண்டில் இவ்வாறான நிலைமை ஏற்படாமல் தவிர்ப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அத்தோடு கடந்த ஆண்டில் இறுதி காலாண்டில் அம்மை நோய் பரவல் சற்று அதிகரித்த போக்கைக் காண்பித்திருந்தது. சில பெற்றோர் தமது பிள்ளைகளுக்கு உரிய வயதில் இதற்காக தடுப்பூசியை வழங்காமை இதற்கான பிரதான காரணியாக இனங்காணப்பட்டுள்ளது. எனவே இம்மாதத்தின் இரண்டாம் வாரத்திலிருந்து தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளாதவர்களுக்கு, அதனை வழங்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

ஜே.என்.1 பிறழ்வு குறித்து சுகாதார அமைச்சு உன்னிப்பாக அவதானித்து வருகிறது. அதிக காய்ச்சல், தடிமன் போன்ற அறிகுறிகளுடன் வைத்தியசாலைகளில் சேர்க்கப்படும் நோயாளர்களின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. ஆனால் இலங்கையில் இதுவரையில் ஜே.என்.1 தொற்றாளர் எவரும் இனங்காணப்படவில்லை. எவ்வாறிருப்பினும் சீரற்ற காலநிலையால் காய்ச்சல் உள்ளிட்ட நோய் நிலைமைகளை ஏற்படுவதைத் தவிர்த்துக் கொள்வதற்காக முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைப் பேணுதல் என்பவற்றைப் பின்பற்றுதல் உகந்ததாகும்.

இவை தவிர, வருடத்துக்கு வீதி விபத்துக்களால் 12 000 பேர் உயிரிழக்கும் துரதிஷ்டவசமான நிலைமை காணப்படுகிறது. குறிப்பாக இளைஞர்கள் அதிகளவில் மோட்டார் சைக்கிளில் விபத்துக்களில் உயிரிழக்கின்றனர். வருடத்துக்கு சுமார் 60 லட்சம் பேர் வைத்தியசாலைகளில் சேர்க்கப்படுகின்றனர். அவர்களில் 10 லட்சம் பேர் விபத்துக்கு உள்ளானவர்களாக உள்ளனர். எனவே, இது தொடர்பில் இவ்வருடத்திலாவது அனைவரும் விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டும். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.