வரி எண்’ செயன்முறையை துரிதப்படுத்துவது எப்படி? ஐ.நா அபிவிருத்தி செயற்திட்ட அதிகாரி ஆலோசனை

‘வரி எண்’ பெற்றுக்கொள்ளும் அனைவரும் வரி செலுத்துகைக்கு உட்படப்போவதில்லை என்பதைத் தெளிவுபடுத்துவதன் மூலமே வரி எண் பெற்றுக்கொள்ளும் செயன்முறையைத் துரிதப்படுத்தமுடியும் என  ஐக்கிய நாடுகள் சபையின் உதவி பொதுச்செயலாளரும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி செயற்திட்டத்தின் ஆசிய, பசுபிக் பிராந்தியப் பணிப்பாளருமான கன்னி விக்னராஜா நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவிடம் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு வருகைதந்திருக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் உதவி பொதுச்செயலாளரும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி செயற்திட்டத்தின் ஆசிய, பசுபிக் பிராந்தியப் பணிப்பாளருமான கன்னி விக்னராஜாவுக்கும் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவுக்கும் இடையிலான சந்திப்பு புதன்கிழமை கொழும்பிலுள்ள நிதியமைச்சில் நடைபெற்றது.

இதன்போது வரிக்கட்டமைப்பை விரிவுபடுத்துதல் மற்றும் அதிகளவானோரை வரி செலுத்துவதற்கு ஊக்குவித்தல் என்பவற்றுக்கு வரிசெலுத்துகைக்குள் உட்பிரவேசிப்பதற்கான செயன்முறையை இலகுபடுத்துவது அவசியம் எனவும், அதற்கு டிஜிற்றல் மயமாக்கல் இன்றியமையாதது எனவும் கன்னி விக்னராஜா சுட்டிக்காட்டினார்.
அதேபோன்று ‘வரி எண்’ பெற்றுக்கொள்ளும் அனைவரும் வரி செலுத்துகைக்கு உட்படப்போவதில்லை என்பதைத் தெளிவுபடுத்துவதன் மூலமே வரி எண் பெற்றுக்கொள்ளும் செயன்முறையைத் துரிதப்படுத்தமுடியும் என்பதே சர்வதேச ரீதியில் தனக்குக் கிடைத்த அனுபவம் எனவும் அவர் எடுத்துரைத்தார்.

அதேபோன்று வரி அறவீட்டு செயன்முறையை வலுப்படுத்துவதற்கு பங்களாதேஷால் கையாளப்பட்ட உத்திகள் இலங்கைக்கு மிகமுக்கியமானவை எனவும், குறிப்பாக ஊழல் நிறைந்திருப்பதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட அந்நாட்டின் அரச வருமானத்திணைக்களம் டிஜிற்றல் மயப்படுத்தப்பட்டமை மற்றும் மாவட்ட மட்டம் வரை விரிவுபடுத்தப்பட்டமை மூலம் செயற்திறன்மிக்க கட்டமைப்பாக மாற்றப்பட்டிருப்பதாகவும் கன்னி விக்னராஜா இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவிடம் தெரிவித்தார்.

குறிப்பாக மாவட்ட மட்டம் மூலம் பிரதேச மட்டம் வரையில் பரந்துபட்டிருக்கும் டிஜிற்றல் முறைமை ஊடாகவே அந்நாட்டில் வரி அறவிடப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அதனை ஏற்றுக்கொண்ட ஷெஹான் சேமசிங்க, வரிக்கட்டமைப்பை டிஜிற்றல் மயப்படுத்துவதே அரசாங்கத்தின் பிரதான இலக்காகக் காணப்படுவதாகவும், மாவட்ட செயலகங்களை அடிப்படையாகக்கொண்டு இச்செயன்முறையை விரிவுபடுத்துவதற்கு அவசியமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன எனவும் குறிப்பிட்டார். அத்தோடு மிகக்கடினமான மறுசீரமைப்புக்களை முன்னெடுத்துவரும் தற்போதைய சூழ்நிலையில், எந்தவொரு தரப்பினருக்கும் விசேட சலுகைகளை வழங்கக்கூடிய வாய்ப்பு இல்லை எனவும், நாடு மீண்டும் ஸ்திரமான நிலைக்குக்கொண்டுவரப்பட்டதன் பின்னரேயே இதில் ஏதேனும் திருத்தங்களை மேற்கொள்ளமுடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும் இம்மாதம் முதலாம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வந்திருக்கும் பெறுமதிசேர் வரி அறவீடு குறித்து சமூகத்தின் மத்தியில் தோற்றம்பெற்றிருக்கும் கருத்துக்கள் குறித்தும் இச்சந்திப்பின்போது விரிவாக ஆராயப்பட்டது.(

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.